×

தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறையில் மேலும் தளர்வு: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை  தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எளிமையாக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார். சென்னை,திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூரில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பொருட்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திரு.வி.க.நகர் மண்டல சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் அருணா, பொறுப்பு மண்டல அதிகாரி செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முதல்வர் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆலோசனை வருகிறார். சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,08,121 பேரில் 94 ஆயிரத்து 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று குறைந்தாலும், பரிசோதனை குறைக்கப்படவில்லை. தமிழகத்தில் மண்டல வாரியாக பொது போக்குவரத்து மக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. ஆனால், நோய் தொற்று அதிகரித்ததன் காரணமாகத்தான் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனாலும், தமிழக மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து வழங்கப்படும். இ-பாஸ் நடைமுறை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இ-பாஸ் என்பது தவிர்க்க முடியாத காரணத்துக்காக மாவட்டத்தில் இருந்து மாவட்டம் செல்வதற்கு வழங்கப்படும் ஒரு நடைமுறையாகும்.

இதனால் இ-பாஸ் வழங்க ஒரு குழு இருந்ததை, ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எளிமையாக்க முதல்வர் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார். மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், உள்ளாட்சி, வருவாய் துறை ஊழியர் உள்ளிட்டோர் முன்கள பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள். தன்னார்வலர்களும் முன்கள பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் எவ்வளவு காலத்துக்கு தேவை என்பது குறித்து அரசு கொள்கை அளவில் முடிவு எடுத்து அறிவிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழகத்திற்கு 56% கூடுதல் மழை
தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை என்பது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவில் அதிகமான மழை பொழிவு கிடைக்கும். தமிழகத்திலும் ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை 56 சதவீதம் கூடுதலான மழை கிடைத்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Tags : Udayakumar ,Tamil Nadu , In Tamil Nadu, e-pass issuance procedure, further relaxation, Minister Udayakumar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...