பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த கேரள பேராயருக்கு ஜாமின் வழங்கியது கோட்டயம் நீதிமன்றம்

கோட்டயம்: பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பேராயருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப்பாக இருந்தார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்து இருந்தனர். அதற்கு பின்னர் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் போது பிராங்கோவை பதவி நீக்கம் செய்து கத்தோலிக்க திருச்சபையின் வாடிக்கன் தலைமையகம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக பிராங்கோவை காவல்துறையினர் கைது செய்தனர். பினனர் கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து பல முறை ஜாமீன் கேட்டு  பிராங்கோ நீதிமன்றத்தை நாடினார். இந்த நிலையில் தற்போது கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் பேராயர் பிராங்கோ முல்லக்கல் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: