×

தடுப்பு மருந்து இல்லாத நிலையில் கொரோனா பாதிப்பை குணப்படுத்த முக்கிய பங்காற்றும் பிளாஸ்மா சிகிச்சை: அனைவரும் தானம் அளிக்க முன்வர வேண்டும்

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பை குணப்படுத்த தடுப்பு மருந்து இல்லாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முக்கிய பங்காற்றும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அனைவரும் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வந்தாலும், அதையும் மீறி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது மட்டுமே கொரோனாவில் மக்களை பாதுகாக்கும் வழியாக உள்ளது.

ஊரடங்கு மற்றும் மாஸ்க் அணிந்து கொண்டே பல மாதங்கள் இருக்க முடியாது என்பதால் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இருப்பதாக முதற்கட்ட ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இந்தியாவில் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த தடுப்பு மருந்து சோதனை முறையில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்களை காக்க பிளாஸ்மா சிகிச்சை முறையை சோதனை முறையில் செயல்படுத்த ஐசிஎம்ஆர் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.

இதன்படி தமிழகத்தில் ராஜிவ் காந்தி அரசு பொது மருந்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் பிளாஸ்மா சோதனை முறையில் தொடங்கியது.இந்த சிகிச்சை முறையின் மூலம் தற்போது வரை 26 பேருக்கு பிளாஸ்மா வழங்கப்பட்டுள்ளது. இதில் 24 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதை தொடர்ந்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி செயல்பட தொடங்கியுள்ளது. இந்திய அளவில் டெல்லிக்கு அடுத்தபடியாக தொடங்கப்பட்டுள்ள 2வது பிளாஸ்மாக வங்கி என்ற பெயரை இந்த வங்கி பெற்றுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 14 நாட்களுக்கு பிறகு பிளாஸ்மா  தானம் அளிக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்று நோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முடியாது.  பிளாஸ்மா தானம் செய்ய முன் வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டு தகுதியானவர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தவர் 14 நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது முறை தானம் அளிக்கலாம்.
தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா - 40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு கோவிட் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும்போது பயன்படுத்தப்படும்.

கொரோனா தொற்று  உள்ள நோயாளிகளுக்கு  குறைந்தபட்சம் 200 மில்லி என்ற விகிதத்தில் பிளாஸ்மா அளிக்கப்படும். அடுத்த பிளாஸ்மா அளவு நோயாளிகளின் மருத்துவ முன்னேற்றத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் இருக்கும் கொரோனா வைரஸ் செயல்பாட்டை நடுநிலையாக்கி வைரஸ் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவுகிறது.
இந்த சிகிச்சை முறை தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இந்த சிகிச்சை முறையின் அடிப்படை.  

இதன்படி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் இருந்து எதிர் அணுக்கள் எடுக்கப்பட்டு நோய் தொற்று தீவிரமாக உள்ளவரின் உடலில் அதை செலுத்தும் அந்த எதிர் அணு நோய் தொற்று எதிர்த்து போராடி அழிக்கும். இவ்வாறு தான் பிளாஸ்மா சிகிச்சை முறை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரையில் பிளாஸ்மா சிகிச்சை கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு விகிக்கும் என்பதால் அனைவரும் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வர வேண்டும் என்று மருந்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 7 இடங்களில்...
பிளாஸ்மா சிகிச்சை முறை மூலம் இதுவரை 24 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் இரண்டு முறை பிளாஸ்மா தானம் அளிக்கலாம். பிளாஸ்மா தானம் வழங்க 30 நிமிடங்கள் மட்டுமே போதும். தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட உள்ளது.



Tags : Vaccine, Corona
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...