×

பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்...: குளித்தலை நகராட்சி ஆணையர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட்

கரூர்: பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் உள்பட 6 பேர் சஸ்பெ்ண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில், 2019-20ம் ஆண்டின், வளர்ச்சி திட்டப்பணிகளில் நிதி செலவு செய்யப்பட்டது குறித்து, கடந்த பத்து நாட்களாக வருடாந்திர தணிக்கை ஆய்வு நடந்து வருகிறது. இதில், பல்வேறு கணக்குகளை ஆய்வு செய்ததில், மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, சேலம் நகராட்சி மண்டல பொது மேலாளர் அசோக்குமார், கண்காணிப்பாளர் அப்துல் ஹாரிப் ஆகியோர் மேற்பார்வையில், தணிக்கையாளர்கள் குளித்தலை நகராட்சியில் அப்போது பணியில் இருந்த கமிஷனர் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், நகராட்சியில் அக்கவுண்டன்டாக பணியாற்றும் சத்யா, 59,73,435 ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நகராட்சி அலுவலர், பணியாளர்களின் சேமநல நிதி, பி.எப்., நிதி போன்றவற்றில் உள்ள பணத்தை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அந்த பணத்தை பாலமுருகன், எல்.பாலாஜி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.சுப்பிரமணி ஆகிய பெயர்களில், செக் மூலம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, சத்யா(56) மீது நடவடிக்கை எடுக்குமாறு, மண்டல பொது மேலாளர் அறிவுறுத்தல்படி குளித்தலை நகராட்சி ஆணையரும், தனி அலுவலருமான மோகன்குமார், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, கணக்காளர் சத்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் 60 லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார், முன்னாள் ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்ளிட்ட 6 பேரை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

Tags : accountant ,Kulithalai Municipal Commissioner , Female Accountant, Rs 60 lakh fraud, Kulithalai Municipality, Commissioner, Suspended
× RELATED நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர்...