×

முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய அரசால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள். போதை பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இதுஎன்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான். செல்லூர் ராஜுவுக்கு கிடைத்த பாராட்டு மழையால் அவர் ராகுல் காந்தி குறித்து பதிவிட்ட கருத்தை நீக்கியிருக்கிறார். இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

* ஆளுநர் ரவி வாய்த்தது நமது கெட்ட நேரம்
ஆளுனர் வெளியிட்ட அழைப்பிதழில் திருவள்ளுவர் புகைப்படம் காவி உடையில் இருப்பது குறித்த கேட்ட கேள்விக்கு, ‘குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக்கொண்டே தான் இருக்கும். அதுபோல் நமது கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்ன தான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்திற்கு மருந்தில்லை’ என்றார்.

The post முல்லை பெரியாறு விவகாரத்தில் ஒன்றிய அரசால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Supreme Court ,Mullai Periyar ,Minister Raghupathi ,Pudukottai ,Minister ,Raghupathi ,Tamil Nadu ,Law ,Kerala government ,Silandiyar ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...