ஆலந்தூர் , சென்ட்ரல், கோயம்பேடு மெட்ரோ நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர் சூட்டல் : முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னை: சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ஜெயலலிதா மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2003-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அரசால் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித்தடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்தை   முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு தேவையான மாநில அரசின் நிலங்கள் மற்றும் நிதி பங்களிப்பினை வழங்கிய பெருமை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் - கட்டம்-ஐ-ன் கீழ்,  ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.  மேற்கண்ட மெட்ரோ நிலையங்களின் பெயர்களை நமது மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மற்றும் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் மாற்றி அமைக்கலாம் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று,

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயரிட்டதைப் போல், ஆலந்தூர் மெட்ரோ – என்பது ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்று பெயரிடப்படுவதாக அறிவித்துள்ளார்.அதேபோல் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம்’ என்று பெயர் வைத்ததைப் போல சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்று அழைக்கப்படும்.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள்ஆசியாவில் மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர் பேருந்து நிலையத்தையும், அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும் திறந்து வைத்ததாலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை  நினைவு கூறும் வகையில்,  புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’என்றும் பெயர் மாற்றங்கள் செய்து நான் ஆணையிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>