×

கொரோனா ஊரடங்கால் தொடர்ந்து முடக்கம்: சுற்றுலா தலங்கள் மூடிக்கிடப்பதால் ஆயிரம் கோடிக்கு வருவாய் இழப்பு

சேலம்: கொரோனா ஊரடங்கால் சுற்றுலாத்தலங்கள் தொடர்ந்து முடங்கிக்கிடக்கிறது. இதில் சேலம் உள்பட 4 மாவட்டங்களில் மட்டும் ₹1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தாக்கம் தொடங்கியது. இதையடுத்து மார்ச் 25ம் தேதி முதல் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் காய்கறி, மளிகை மற்றும் மருந்துக்கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் செயல்படவில்லை. தற்போது சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது.  ஊரடங்கு அமலால் சுற்றுலா தலங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடக்கிறது, அரசு, தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் இன்னும் முழுமையாக செயல்பட அனுமதியளிக்கப்படவில்லை.

இதில் தமிழகத்தை பொறுத்தவரை  சுற்றுலா தலங்கள் மூலம் அரசுக்கு  பல கோடி வருவாய் கிடைத்து வருகிறது.  இதைதவிர சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்ட், சுற்றுலா வேன்கள், ஆட்டோக்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், பூங்காக்கள், ஏரி, படகு இல்லம் உள்ளிட்டவைகளை நடத்துபவர்களுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. நான்கு மாதத்திற்கும்  மேலாக தொடர்ந்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் ஓட்டல் உரிமையாளர்கள் முதல் சிறு வியாபாரிகள் வரை, அனைவரும்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் ஏற்காட்டை சேர்ந்த சுற்றுலா வேன் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி உள்பட மலை வாசஸ்தலங்கள் தவிர ஏராளமான கடற்கரைகள், கோயில்கள், பொழுது போக்கு இடங்கள் உள்ளன. இவற்றின் மூலம் அரசுக்கு நாள் தோறும் பல கோடி வருவாய் கிடைத்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித் தரும் சுற்றுலாத் தலமாக ஏற்காடு விளங்குகிறது.  இங்கு ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் இதைத்தவிர கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

தவிர பண்டிகை நாட்கள், வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இப்படி வரும் பயணிகள் ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட், தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். அதேபோல் ஏற்காட்டில் பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோயில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், அரசு தாவரவியல் பூங்கா, ஏரி பூங்கா, மான்பூங்கா, அண்ணா பூங்கா, படகு இல்லம் என்று பிரசித்தி பெற்ற இடங்களை கண்டுகளிக்க, சுற்றுலா பயணிகள் வேன்களை வாடகைக்கு எடுக்கின்றனர். இவர்களிடம் நாள் கணக்கில் வாடகை வசூலித்து சுற்றுலா இடங்களை சுற்றி காட்டுகிறோம். ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் அனைத்தும் முடங்கி கிடக்கிறது.

இதேபோல் நாமக்கல்லில் கொல்லிமலை, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் கோயில், தர்மபுரியில் ஒகேனக்கல், கிருஷ்ணகிரியில் அவதானப்பட்டி ஏரி, சேலத்தில் மேட்டூர் அணை உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இங்கும் வேன், ஓட்டல், ரெஸ்டாரண்ட், தங்கும்விடுதி, சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள் என வேலையை இழந்துள்ளனர். இந்த வகையில் 4 மாவட்ட சுற்றுலாத்தலங்களிலும் ₹1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வேன் உரிமையாளர்கள் கூறினர்.

வங்கிக்கடன் கட்ட முடியாமல் அவதி
சுற்றுலா தலங்களில் வேன் வைத்திருப்போர் 90 சதவீதம் பேர் வங்கியில் கடன் வாங்கித்தான்,   தொழில் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த நான்கு மாதமாக சுற்றுலா வேன்கள் இயங்கவில்லை. இதனால் வங்கிக்கடனுக்கான அசல்,வட்டி கட்ட முடியவில்லை. 4 மாதமாக அசல், வட்டி தொகை வங்கிக்கணக்கில் சேர்ந்துள்ளது. ஒரு பக்கம் வங்கிக்கடன், மறுபுறம் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வருகிறோம் என்பதும் இவர்களின் குமுறல்.


Tags : closure ,Corona ,tourist sites , Corona, curfew, tourist sites, loss of revenue
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...