×

வங்கி முறையை சீரமைக்க முயன்றதால் உர்ஜித் படேல் ஆர்பிஐ கவர்னர் பதவியை இழந்தார்: மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: வங்கி அமைப்பு முறையை சீரமைக்க முயன்றதால் மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை இழந்தார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்தபின் கவர்னராக வந்தவர் உர்ஜித் படேல். குறுகிய காலமே பதவியில் இருந்த உர்ஜித் படேல், தனிப்பட்ட காரணங்களால் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் உர்ஜித் படேல் சமீபத்தில் ஓவர் டிராஃப்ட்: சேவிங் தி இன்டியன் சேவர் எனும் நூல் எழுதியுள்ளார். அந்த புத்தகம் குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா சமீபத்தில் ஒரு நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், திவால் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் விதத்தில் மத்திய அரசு செயல்பட்டதால் அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேலுக்கும் , மத்திய அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மத்திய அரசு செய்ய இருந்த திருத்தங்களுக்கு உர்ஜித் படேல் சம்மதிக்கவில்லை. இதனால் அவர் பதவியிருந்து விலக நேர்ந்தது என தெரிவித்திருந்தார்.

அந்த நாளேட்டின் செய்தி தொடர்பான இணைப்பை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டு, மத்திய அரசை விமர்சித்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், வங்கி முறையைச் சீரமைக்க முயன்றதற்கு உர்ஜித் படேல் தனது பதவியை இழக்க நேர்ந்தது. ஏன் தெரியுமா, வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் கடனை திருப்ப பெற பிரதமர் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.



Tags : RBI ,Urjit Patel ,governorship ,Rahul Gandhi ,government ,Central Government ,Bank , Rahul Gandhi, Bank, Central Government
× RELATED தனியார் நிதி நிறுவனங்களிடம் முதலீடு...