×

மாஸ்க் ரூ.6.45க்கு கொள்முதல் தர பரிசோதனைக்கு பிறகே வாங்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

சென்னை: பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச முகக்கவசங்கள் ரூ.6.45க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆய்வகங்களில் பரிசோதித்து தரத்தை உறுதிப்படுத்திய பிறகே வாங்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் கொரோனா தொற்று தடுப்பு களப்பணியாளர்களுக்கு மருத்துவ பொருட்களை நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பொதுமக்களுக்கு இலவச மறுபயன்பாட்டு முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். இதற்காக தமிழக அரசு ரூ.30.7 கோடி மதிப்பீட்டில் 69 லட்சம் குடும்பங்களில் உள்ள 6.70 கோடி பேருக்கு முகக்கவசங்களை கொள்முதல் செய்துள்ளது. இதற்காக 19 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றன. ஒப்பந்ததாரர்கள் முதற்கட்டமாக 5,000 முகக்கவசங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை ஆய்வகங்களில் பரிசோதித்து தரத்தை உறுதிப்படுத்திய பிறகே மீண்டும் அரசு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு முகக்கவசத்தின் விலை ரூ.6.45 என்ற அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு 2 முகக்கவசங்கள் இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும். இந்த முகக்கவசம் மூன்று அடுக்குகள் கொண்ட தரமான துணியினால் செய்யப்பட்டுள்ளது. அடிக்கடி துவைத்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* போராட்டம் வேண்டாம்
அமைச்சர் உதயகுமார், நிருபர்களிடம் மேலும் கூறுகையில், ‘வருவாய்த்துறை அலுவலர்கள் இந்த கொரோனா காலத்தில் போராட்டங்கள் நடத்த வேண்டாம். உங்களுடைய கோரிக்கைகள் அரசுக்கு வரப்  பெற்றுள்ளது. பேச்சுவார்த்தை மூலம் நல்ல தீர்வு காணப்படும் என்றார்.

Tags : RP Udayakumar ,purchase quality test ,announcement , Mask for Rs.6.45, Purchase, Quality Inspection, Minister RP Udayakumar
× RELATED திருவண்ணாமலை – சென்னை இடையே நாளை முதல்...