×
Saravana Stores

கந்த சஷ்டி கவச விவகாரம்..: கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை தொடர்ந்து செந்தில்வாசன் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

சென்னை: கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சரஸ்வதி தேவி குறித்து மிகவும் இழிவாக பதிவிட்டு அசிங்கப்படுத்தியும், தமிழ் கடவுளான முருகக்கடவுள் குறித்தும், கந்த சஷ்டி கவசத்தை மிகவும் கொச்சையாக பேசி வீடியோ வெளியானது. இதுகுறித்து பாஜ மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் மனுவில், இந்துக்களின் கடவுள்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் வெளியிட்டு வருகிறது. அதனால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.  

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் வெளியீட்டாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் செந்தில்வாசனிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரையும், சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், மவுன்ட் கோபால் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கந்த சஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த 2வது நபர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதால் செந்தில்வாசன் ஒரு வருடத்திற்கு ஜாமீன் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 


Tags : Kanda Sashti ,Surendran , Kanda Sashti Armor, karuppar kootam, Surendran, Senthilvasan, Thug Act
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா: கனிமொழி எம்.பி. ஆய்வு