×

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு அரசு வேலை: முதல்வர் பணி நியமன ஆணையை வழங்கினார்

சென்னை: போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி நேற்று வழங்கினார். உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கடந்த மாதம் 26ம் தேதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தின் வாரிசுதாரரான மறைந்த ஜெயராஜ் மூத்த மகள் பெர்சிஸ்க்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையை முதல்வர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், தலைமை செயலாளர் சண்முகம், பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார்,

தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

பணி நியமன ஆணையை பெற்ற பிறகு ஜெயராஜ் மூத்த மகள் பெர்சிஸ் அளித்த பேட்டி: முதல்வர் எடப்பாடி, சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், அதை நியாயமான முறையில் விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று எங்களுக்கு உறுதி தந்துள்ளார். இந்த விஷயத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்த தமிழக அரசு, தமிழக மக்கள், அனைத்துக் கட்சியினர் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிபிஐ விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. எங்களுக்கான நியாயத்தை நீதித்துறை வழங்கும் என்று நம்புகிறோம். அதற்கு தமிழக அரசும் உறுதுணையாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். இந்த வழக்கை விரைவாக விசாரித்து, தவறு செய்தவர்களுக்கு விரைவில் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பத்திரிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Chief Minister ,Jayaraj ,police attack , Jayaraj, daughter, who was attacked by the police, has a government job, Chief Minister's appointment order
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...