×

நேற்றைய மின்னல் வேக தாவல் 14 லட்சம்...

புதுடெல்லி: நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்களின் விவரம் குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 576 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 4 லட்சத்து 67 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 63.92 சதவீத நோயாளிகள் குணமாகி உள்ளனர். 4வது நாளாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 705 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 257 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதன் மூலம், நாட்டில் மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கையின்படி, நாடு முழுவதும்  இதுவரையில் ஒரு கோடியே 62 லட்சத்து 91 ஆயிரத்து 331 பேருக்கு கடந்த 25ம் தேதி வரையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 4 லட்சத்து 42 ஆயிரத்து 263 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்தது.

* சிக்கிமில் முதல் பலி
சிக்கிம் மாநிலத்தில் மொத்தம் 357 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு சிக்கிம் மாவட்டம், ரோங்கிலி பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கடந்த சனியன்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதன் மூலம், இம்மாநிலத்தில் கொரோனால் முதல் பலி பதிவாகி இருக்கிறது.

* 3 பரிசோதனை  மையம் பிரதமர் இன்று திறப்பு
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புதிய உயர் செயல்திறன் மிக்க ஆய்வகங்கள் நொய்டா, மும்பை, கொல்கத்தாவில் இன்று திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இவற்றை திறந்து வைக்கிறார். இந்த ஆய்வகங்கள் மூலமாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேரின் மாதிரிகளை சோதனை செய்ய இயலும்.

* உலகளவில் 1.6 கோடி தொற்று
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 60 லட்சமாக உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 41 லட்சம் பேர் பாதித்துள்ளனர். 2வது இடத்தில் உள்ள பிரேசிலில் 23 லட்சம் பேரும், அதற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் 14 லட்சம் பேருக்கும் தொற்று உறுதியாகி இருக்கிறது. உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு, ஒரு லட்சத்து 46,460 பேர் இறந்துள்ளனர். அதிகப்பட்சமாக நியூயார்க்கில் 32,608 பேர் இறந்துள்ளனர். பிரேசிலில் 86,449, இங்கிலாந்தில் 45,823 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Yesterday, lightning speed, tab, 14 lakh ...
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில்...