×

‘இதுதான் எனது கடைசி வீடியோ’ நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை; சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: நடிகை விஜயலட்சுமி நேற்று மாலை திடீரென வீட்டில்  தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையே, ‘இதுதான் எனது கடைசி வீடியோ’ என கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதில், சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தமிழில் பூந்தோட்டம், பிரண்ட்ஸ், கலகலப்பு, மிலிட்டரி, ராமச்சந்திரா, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் நடித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி வீடியோ வெளியிட்டு, சீமானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் விஜயலட்சுமி பேசியிருப்பதாவது:
இது என்னுடைய கடைசி வீடியோ.4 மாதங்களாக சீமான், சீமானோட கட்சி, சீமான் கொடுத்த பிரஷரால் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். நேற்று முன்தினம் ஒருவர் வந்து பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் வந்து ரொம்ப அசிங்கப்படுத்தினது, இது எல்லாம் எனக்கு போதும்னு ஆகிப்போச்சு. இன்று வந்து நான், இது பிபி மாத்திரை. ஆல்ரெடி 2 மாத்திரை போட்டாச்சு. அதிகமாகவும் போட்டாச்சு. இன்னும் கொஞ்சநேரத்தில் பிபி குறையும். இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறேன். இந்த வீடியோவில் நான் தெளிவாக என்ன சொல்ல விருப்பப்பட்டேன்னா, எனது ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நான் கர்நாடகாவில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை போட்டு சீமான் ரொம்ப டார்ச்சர் பண்றது, நான் ஒரு பெண்ணாக இருந்து சந்திப்பது அதிகம். சீமானுக்கு இந்த வாழ்க்கை பிச்சை போட்டது. நான் அவமானப்பட்டால் என்ன பண்ண வேண்டும் என்பது என்னோட முடிவு. இந்த வீடியோவில் நான் தெளிவாக சொல்லிக்கிறேன். என் குடும்பத்தை நான் உங்களிடம் விட்டுட்டு போகிறேன். தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கலாமா, வேண்டாமா என்று யோசித்து இருக்கிறது. என்னுடைய இறப்பு பெரிய விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

இவ்வாறு விஜயலட்சுமி கண்ணீர் மல்க சீமான் உள்ளிட்டோர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறிய கடைசி வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நேற்று மாலை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் மயக்க நிலையில் கிடந்த விஜயலட்சுமியை மீட்டு, அடையாறு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Seeman , ‘This is my last video’, Actress Vijayalakshmi, Suicide Attempt, Hospital, Treatment, Seeman, Accusation
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...