×

நீதிமன்றத்தில் 68 கோடி இழப்பீடு செலுத்தப்பட்டது ஜெயலலிதா வீடு அரசுடமை ஆனது: நினைவு இல்லமாக மாற்ற முடிவு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்காக தமிழக அரசு ரூ.68 கோடியை இழப்பீடாக நீதிமன்றத்தில் வழங்கியது. இதன் மூலம், ஜெயலலிதாவின் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை மக்கள் பார்க்கும் வகையில், நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்று கடந்த 2017 ஆகஸ்ட் 17ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபக், தீபா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியில் அரசு வேகமாக செயல்பட்டது.  ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டின் மொத்தப் பரப்பளவு 10 கிரவுண்ட் 0322 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அரசிடம் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நிர்வாக அனுமதி அளித்து கடந்த 2017 அக்டோபர் 5ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை மாவட்ட ஆட்சித்தலைவரால் கோரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான உடனடி செலவினங்களுக்கு 5,25,000 நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2018 ஜனவரி 4ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளவும், செயல்விளைவுகள் மதிப்பீடு பணிகள் மேற்கொள்ளவும், 30,09,338 நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2018 ஜூலை 17ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.  

இதையடுத்து, ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது தொடர்பாக கடந்த 2019 ஜனவரி 2ம் தேதி பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜனவரி 22ம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரின் நடவடிக்கையில், நில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை எனவும், அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்த்தவோ, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவோ எந்த அவசியமும் எழவில்லை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கிடையே, வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அறிவித்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தாலும், ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன்படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கும், அந்த இடத்தை கையகப்படுத்தவும் 2013ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவது குறித்த விசாரணையை சென்னை தென் மண்டல வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நிலம் கையகப்படுத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டப்படி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தீபா, தீபக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விசாரணைக்கு தீபாவின் கணவர் மாதவன், தீபக் தரப்பு வழக்கறிஞர் சுதர்சனம், வருமான வரித்துறை பாக்கிக்காக, வருமான வரித் துறை துணை ஆணையர் ரஜய் ராபின் சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.அப்போது தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்த சென்னை உயர் நீதிமன்றம், வேதா நிலையத்தை அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி யோசனை தெரிவித்ததை தீபக் தரப்பு வழக்கறிஞர், விசாரணையின்போது சுட்டிக் காட்டினார்.

வருமான வரித்துறை தரப்பில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய 36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462 ரூபாய்க்காக, வேதா நிலையத்தை முடக்கம் செய்வதற்கான நடவடிக்கையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட, சென்னை தென் மண்டல வருவாய் கோட்டாட்சியர் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: நிலம் கையகப்படுத்தல், நியாயமான இழப்பீட்டு உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் கீழ், போயஸ் தோட்டத்து கட்டிடங்களுக்கு 2 கோடியே 73 லட்சம் ரூபாயும், அங்குள்ள மரங்களுக்கு 11 ஆயிரத்து 47 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தின் நிலத்திற்கு சதுர அடிக்கு 12,060 ரூபாய் வீதம், 24 ஆயிரத்து 322 சதுர அடிக்கு, 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாயும், நூறு சதவீத கூடுதல் இழப்பீடாக 29 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரத்து 320 ரூபாயும் சேர்த்து மொத்தம் 58 கோடியே 66 லட்சத்து 46 ஆயிரத்து 640 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் கட்டிடங்களுக்கான மதிப்பீடு மற்றும் மரங்களுக்கான மதிப்பீடும் நூறு சதவீத கூடுதல் இழப்பீடு சேர்த்து 5 கோடியே 47 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. கூடுதலாக 12 சதவீத சந்தை மதிப்பாக 3 கோடியே 76 லட்சத்து 52 ஆயிரத்து 359 ரூபாய் கணக்கிட்டு, 67 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரத்து 33 ரூபாய் என இழப்பீடு நிர்ணயித்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலம் கையகப்படுத்துவது மற்றும் இழப்பீடு தொடர்பான விசாரணையில் கடைசி நிலை வரை சம்பந்தப்பட்ட தீபா, தீபக் தரப்புடன் உடன்பாடு எட்டப்படாததால், இந்த விவகாரத்தை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார். இந்த இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் செலுத்தும்படியும் அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ₹67.90 கோடி டெபாசிட் செய்துள்ளது. இதை தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் அரசுடைமையானது. தற்போது தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் பெயருக்கு பட்டா மாற்றப்பட்டு விட்டது.

இதுகுறித்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ நினைவு இல்லத்தில் ஒரு பகுதியை முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தலாம் என்ற நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் நினைவு இல்லத்தில் முதல்வரின் முகாம் அலுவலகம் அமைக்கப்பட மாட்டாது. அதேபோன்று, மறைந்த முதல்வர் வருமான வரி பாக்கியாக செலுத்த வேண்டிய ₹36 கோடியே 87 லட்சத்து 23 ஆயிரத்து 462 அரசு அளித்துள்ள டெபாசிட் தொகையில் இருந்து வழங்கப்படும்” என்றார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். அவர் வெளியே வந்ததும், போயஸ் கார்டன் இல்லத்தில்தான் தங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக அரசின் அடுத்தடுத்த நடவடிக்கையால் அதற்கு வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

ஜெயலலிதா அறநிறுவனம் அமைப்பு
வேதா நிலையம் இல்லத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை பேணிக்காக்கும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறநிறுவனம் அமைக்க அவசரச் சட்டம் கடந்த மே 21ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, முதலமைச்சர் - தலைவர்,  துணை முதல்வர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு செயலாளர், நிதித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் - உறுப்பினர் செயலர், அருங்காட்சியகங்கள் இயக்குநர், பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்), அரசால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு உறுப்பினர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாரிசுதாரர்கள் தொகையை பெற்றுக்கொள்ளலாம்
சென்னை, போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள வேதா நிலையம் இல்லத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான தீர்ப்பாணை தொகை  நில எடுப்பு அலுவலர் / தென் சென்னை கோட்டாட்சியரால் கடந்த 22ம் தேதி அறிவிக்கப்பட்டு, தீர்ப்பாணை தொகையான ₹67,88,59,690 நகர உரிமையியல் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டன. இதையடுத்து அவை அரசின் சொத்தாகி உள்ளது. எனவே, வாரிசுதாரர்கள் மற்றும் உரிமை கோருபவர்கள் அந்த நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குரிய தொகையை பெற்றுக்கொள்ளலாம். தற்பொழுது கையகப்படுத்தப்பட்டுள்ள ‘வேதா நிலையம்’ இல்லம் மற்றும் அந்த இல்லம் அமைந்துள்ள நிலம் ஆகியவை கடந்த 22ம் தேதி தென் சென்னை கோட்டாட்சியரால் அரசுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வேதா நிலையம் இல்லம், அது அமைந்துள்ள நிலம் மற்றும் அங்குள்ள பொருட்களை பராமரிக்கவும், நிர்வகிக்கவும் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா அறநிறுவனத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

‘முதல்வர் இல்லமாக மாற்ற சாத்தியமில்லை’
வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக, புகழேந்தி என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் கடந்த மே 27ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் வழங்கப்பட்ட பரிந்துரைகள் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு முதலமைச்சரின் இல்லமாக மாற்ற சாத்தியக்கூறுகள் இல்லை என அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பு எவ்வளவு?
போயஸ் தோட்டத்தின் மொத்த பரப்புக்கு சதுர அடிக்கு 12,060 வீதம் 24,322 சதுர அடிக்கு 29,33,23,320 இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சட்டப்படி நூறு சதவீத கூடுதல் இழப்பீடாக 29,33,23,320 என மொத்தம் 58,66,46,640 வழங்க முடிவு செய்துள்ளது.
கட்டுமானங்களின் மதிப்பு     2,73,65,370
மரங்களின் மதிப்பு    11,047
நூறு சதவீத கூடுதல் இழப்பீடு    2,73,76,517
மொத்தம்    5,47,53,034
12 சதவீத கூடுதல் சந்தை மதிப்பு    3,76,52,359
நிலம், கட்டிடம், மரம் என மொத்த இழப்பீடு    67,90,52,033



Tags : house ,court ,Jayalalithaa , Court, Compensation, Jayalalithaa House, Memorial House
× RELATED ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது