சென்னை: தினகரன் செய்தி எதிரொலி காரணமாக கான்ட்ராக்டர்கள் உரிமம் புதுப்பித்தலுக்கு டிசம்பர் 31ம் ேததி வரை கால நீட்டித்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கான்ட்ராக்டர்களில் டெண்டரில் கலந்து கொள்ள அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவது, ஏரி, குளங்களை புனரமைப்பது, தடுப்பணைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்ள மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்களது ஒப்பந்த உரிமத்தை புதுப்பித்தால் தான் டெண்டரில் பங்கேற்க முடியும்.
இந்நிலையில், ஒப்பந்ததாரர்கள் மறு உரிமம் பெற வேண்டும் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஜிஎஸ்டி, வருமானவரி மற்றும் பில் உட்பட தேவையானஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து பெற்று மறு உரிமம் பெறுவத சிரமம். இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மறு உரிமம் பெறாததால் டெண்டரில் பங்கேற்க முடியாது என்று விரிவான தகவல்களுடன் தினகரன் நாளிதழில் கடந்த 16ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் புதுப்பித்தலுக்கு டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது, பொதுப்பணித்துறை நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் கே.ராமமூர்த்தி அனைத்து மண்டல தலைமை பொறியாளர், கண்காணிப்பு மற்றும் செயற்பொறியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளாளர். அதில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கான்ட்ராக்ரடர்கள் உரிமம் புதுப்பிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, வரும் டிசம்பர் 31ம் தேதி வரை கான்ட்ராக்டர்கள் டெண்டரில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இந்த கால கட்டத்துக்குள் கான்ட்ராக்டர்கள் தேவையான ஆவணங்களை பெற்று மறு உரிமம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.