×

ஊரடங்கால் வாடகை கூட கொடுக்க முடியவில்லை 50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும்: முதல்வருக்கு டீக்கடை உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை:  ஊரடங்கு காரணமாக 4 மாதம் வாடகை கூட கொடுக்க முடியவில்லை. அதனால், டீக்கடை உரிமையாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லாமல் 50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டி.ஆனந்தன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது: கொரோனா நோய் தமிழகத்தில் இருந்து அறவே இல்லாமல் செய்வதற்காக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு டீக்கடை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் நான்கு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில் பல ஆயிரக்கணக்கான டீக்கடைகளும், சிறுகுறு நடுத்தர வணிகர்களும் கடை வாடகை கூட கொடுக்க முடியாமலும், வணிகர்கள் தங்களின் குடும்பத்தை காப்பாற்ற முடியாமலும் கஷ்டப்படுகிறார்கள். டீக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி கடைக்கு உள்ளேயே டீ கொடுப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது, 50 சதவீத டீக்கடைகள் பூட்டியே கிடக்கின்றது. கட்டிட உரிமையாளர்கள் வாடகை தரும்படி நிர்ப்பந்தம் செய்கிறார்கள். பூட்டி கிடந்த நான்கு மாதகால வாடகையை பாதியாக குறைத்தோ அல்லது தாமதமாக கொடுப்பதற்கோ தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

பூட்டிய டீக்கடைகள் திறப்பதற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படுகிறது. ஆகவே, முதல்வர் தயவுகூர்ந்து வட்டியில்லாமல் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ, தேசிய வங்கிகள் மூலமாகவா டீக்கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி உரிமம் மூலமாக 50 ஆயிரம் கடன் வழங்க வேண்டும்.

Tags : cafeteria owners ,CM , Curfew, rent, credit, chief, tea shop owners demand
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...