×

ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஏரியில் மண் எடுப்பதை கண்டித்து, கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்த ₹50 லட்சம் செலவில் குடிமராமத்து பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 20 நாட்களாக பணிகள் தொடங்கின. இந்நிலையில், மதகுகள் அமைப்பதற்காக ஏரியின் நடுவில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கப்பட்டது. இதையறிந்த, அப்பகுதி மக்கள், “ஏரியில் மண் எடுக்கக்கூடாது. ஏரி கரையை உடைக்க கூடாது” என்று வலியுறுத்தி மண் எடுத்த லாரிகளை சிறைப்பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார், பொதுப்பணித்துறை, வருவாய்துறை அதிகாரிகள் வந்து போராட்டக்காரர்களை சமரசம் செய்து, “ஏரியில் மண் எடுக்க கூடாது. கரையை உடைக்கக்கூடாது” என்று ஒப்பந்ததாரர்களிடம் கூறி தற்காலிகமாக பணிகளை நிறுத்தினர். மேலும், இதுகுறித்து, “சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்யப்படும் வரை பணிகள் தொடரக்கூடாது” என கூறினர். இதனைத் தொடர்ந்து உடைக்கப்பட்ட  கரையை சீரமைத்தனர். இதனையடுத்து, போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,Periyapalayam ,lake , Lake, Lorry, Prison, Public Struggle, Periyapalayam
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...