×

ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் அள்ளுவதாக கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

பெரியபாளையம், ஏப். 25: பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் அள்ளுவதாக கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்
பட்டது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அத்தங்கிகாவனூர் ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் இருந்து தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிக்கு சவுடு மண் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஏரியில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் உள்ள பகுதியில் சவுடு மண் எடுக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், கனிம வளத்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்தனர். ஆனால், சவுடு மண் அள்ளும் தனி நபர்கள் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து வேறு பகுதியில் மண் அள்ளுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இரவு நேரங்களில் இந்த ஏரியில் உள்ள ஒரு பகுதியில் மணல் எடுத்து வெளி இடங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் குப்பம் கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண் எடுக்க வேண்டிய குறிப்பிட்ட இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் சவுடு மண் அள்ளியதாக கிராம மக்கள் குற்றம் சாட்டி குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அளவுக்கு அதிகமான ஆழத்தில் சவுடு மண் அள்ளுவதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் சவுடு மண் எடுத்த தனி நபர்கள் பொக்லைன் இயந்திரங்களை ஏரியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். மேலும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சவுடு மண் அள்ளுவோம் என கிராம மக்களிடம் கூறினர். இப்பிரச்னையால் நேற்று தற்காலிகமாக குவாரியை மூடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் அள்ளுவதாக கூறி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Athangikavanur lake ,Thiruvallur District ,Ellapuram Union ,Athangikavanur Panchayat ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...