×

கொரோனா மரணத்திலேயே இவ்வளவு பொய் கணக்கு எழுதியவர்கள் ஒவ்வொரு திட்டத்துக்கு ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய் கணக்கு எழுதி இருப்பார்கள்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: கொரோனா மரணத்திலேயே இவ்வளவு பொய் கணக்கு எழுதியவர்கள், ஒவ்வொரு திட்டத்துக்கு ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய் கணக்கு எழுதி இருப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பாஜ பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமுர்த விஜயக்குமார் உள்ளிட்ட 500 குடும்பங்கள் பாஜவிலிருந்தும், அதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து 50 குடும்பங்களும் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

அப்போது தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அவர்களை வரவேற்று பேசியதவாது: கொரோனா முடியட்டும் என்று காத்திராமல் உடனடியாக திமுகவில் இணைந்துவிட வேண்டும் என்று துடிப்போடு ஆர்வத்தோடு முன்வந்த உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். யாரெல்லாம் இணையக் காத்திருக்கிறார்கள் என்று நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் எனக்கு ஒரு பட்டியலைக் கொடுத்தார். மிக நீண்ட அந்தப் பட்டியலை வாசித்தால் அதுவே நீண்ட நேரம் ஆகும். ஊடரங்கு போட்டு கொரோனாவைக் கட்டுப்படுத்தி விடுவோம் என்றார்கள். ஆனால் 130 நாட்களாக ஊடரங்கில் தான் இருக்கிறோம்.

ஆனால் கொரோனா குறையவில்லை என்றால் இந்த அரசாங்கத்துக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தத் தெரியவில்லை என்று தானே அர்த்தம்? கொரோனாவில் மரணம் அடைந்தவர்கள் தமிழகத்தில் தான் குறைவு என்று காட்டுவதற்காக, இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைத்து விட்டார்கள். மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிக் கொண்டு இருக்கிற ஆட்சி முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி. மரணத்திலேயே இவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பவர்கள், ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒதுக்கும் பணத்தில் எவ்வளவு பொய்க்கணக்கு எழுதி இருப்பார்கள். கொரோனா காலத்திலும் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலிடம் மாநில அரசு மாட்டிக் கொண்டு விட்டது.

மத்திய அரசுக்கு நாட்டு மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் கிடையாது. ஏதோ ஒரு கற்பனையில் கார்ப்பரேட்டுகளுக்கு வசதியான ஒரு ஆட்சியை அவர்கள் நடத்தி வருகிறார்கள். சாதாரண மக்கள் மீது அவர்களுக்கு அக்கறை இருந்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து தங்கள் மாநிலத்துக்குச் செல்லும் துரதிஷ்டமான சூழலை உருவாக்கி இருப்பார்களா? 20 லட்சம் கோடியில் திட்டங்கள் என்றார்கள். 3 லட்சம் கோடியில் உதவிகள் என்றார்கள். 50 ஆயிரம் கோடியில் தொழிலாளர்களுக்கு சலுகைகள் என்றார்கள். எல்லாமே காற்றோடு போய்விட்டது.

இவை எல்லாவற்றையும் விட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் கை வைத்து விட்டார்கள். படிக்க முடியாது, வேலைக்குப் போக முடியாது என்ற நிலைமையை உருவாக்குகிறார்கள். இதற்கு எதிராக திமுக  உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அதன் தீர்ப்பைப் பொறுத்து அடுத்தகட்ட நவடிக்கையில் இறங்குவோம். இப்படி ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி மக்களது உரிமைகளுக்காக இயங்கும் திமுகவை நோக்கி வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

இன்னும் சில மாதங்களில் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கும் போது, உங்களை அதில் இணைத்துக் கொள்ளுங்கள்.  நாகை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : death ,MK Stalin ,Corona , Corona, False Account, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...