×

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது: 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெறும்

சென்னை : தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது. இது தொடர்ந்து 6 மாதங்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகத்தில் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்புமருந்து நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து இருப்பதாக  ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.  இந்நிலையில் இந்தியாவில் பாரத் பையோ டெக் மற்றும் புனே தேசிய வைராலஜி ஆய்வு மையம் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் 12 மருத்துவ மையங்களில் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் அனுமதி அளித்தது.

இதன்படி இந்த மருந்தை மனித உடலில் செலுத்தி ஆய்வு செய்யும் நடைமுறை சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நேற்று தொடங்கியது. ரத்த பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, உடல் ஆய்வு, மருத்துவ பின்னணி என அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொண்ட பிறகு ஆரோக்கியமான 18 வயது முதல் 55 வயதுடைய தன்னார்வலர்கள் கோவாக்சின் மருந்தை உடலில் செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதற்கட்ட ஆய்வில் நேற்று இருவருக்கு 0.5 எம்எல் என்ற குறைந்த அளவில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:

முதல் கட்டத்தில் 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி இருவருக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள இவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. 14 நாட்களுக்குப் பிறகு 2வது முறையாக கோவாக்சின் மீண்டும் இவர்களுக்கு செலுத்தப்படும். இதனையடுத்து 28வது நாள், 42வது நாள், 104வது நாள், 194வது நாள் அவரது ரத்த மாதிரிகள் எடுத்து எதிர்ப்பாற்றல் குறித்து பரிசோதனை செய்யப்படும். இரண்டாம் கட்டமாக அனைத்து விதமான மக்களும் இந்த சோதனையில் ஈடுபடுத்தபடுவார்கள். கோவேக்சின் மருந்தை எடுத்துக்கொண்டவர் மக்களோடு மக்களாக தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : vaccine trial ,Tamil Nadu ,Kovacs , Tamil, covaxin vaccine, trial, started, 6 months
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...