×

புதுகை அருகே துயர சம்பவம்: இறப்பதற்கு முன்னரே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.!வாட்ஸ்அப்பில் அனுப்பி உயிரை மாய்த்த வாலிபர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வாலிபர் ஒருவர், இறப்பதற்கு முன்பே தனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கி நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்துவிட்டு அதன்படியே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா நகரை சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் சதீஷ்குமார்(19). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐடிஐ 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18ம் தேதி குடும்ப பிரச்னையால் அவரது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் சதீஷ்குமாரை திட்டியதோடு, அடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் தன் படத்தை வைத்து தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை டிசைன் செய்து, அதனை தனது நண்பர்கள் 4 பேருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டு தலைமறைவாகி உள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சதீஷ்குமாரை பல இடங்களிலும் தேடி வந்துள்ளனர். ஆனால், அன்றைய நாள்முதல் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் 19ம் தேதி அன்று தனது ஊரின் அருகே உள்ள மழவராயன்பட்டி கிராமத்தில் இருந்த ஒரு தோட்டத்தில் உள்ள பலாமரத்தில் சதீஷ்குமார் தூக்கிட்டு சடலமாக தொங்கியதாக தகவல் வந்தது.

இதில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி உருமநாதபுரம் மயானத்தில் இறுதி காரியங்கள் செய்து எரித்துள்ளனர். தகவலறிந்த கேவிகோட்டை விஏஓ காமாட்சி, ஆலங்குடி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், பாத்திமாநகரை சேர்ந்த சதீஷ்குமார் உயிரிழந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் தடயங்களை மறைத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் எரித்து விட்டதாகவும், இது சட்டத்துக்கு புறம்பானது என அதில் கூறப்பட்டிருந்தது.

அதன் பேரில் போலீசார், சதீஷ்குமாரின் தந்தை சின்னகருப்பன், சகோதரர் மதியழகன், அவரது உறவினர்கள் முருகன், செல்லதுரை ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட மன விரக்தியில் வாலிபர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து அதனை நண்பர்களுக்கு அனுப்பி விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pudukai , Revival, Tragedy, Tear Tribute Poster, WhatsApp
× RELATED புதுகையில் பாதிரியார் வீட்டில் நகை...