×

கொரோனா ஊரடங்கால் தாமதம் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க முடியாது: கட்டண நிர்ணய குழு முடிவால் சிக்கல்

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது என்று கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாமலும் பல பள்ளிகள் திறக்க முடியாமலும் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 10 ஆயிரம் நர்சரி பள்ளிகள், 4,500 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் 2,800 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டு மேற்கண்ட தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கட்டண நிர்ணய குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் மூலம் ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒரு முறை தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தைதான் பெற்றோரிடம் வசூலிக்க வேண்டும் என்றும் கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் மேற்கண்ட தனியார் பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளுக்கான அங்கீகாரத்தின் அவகாசம் 2020 மே 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆண்டுக்கு ஒரு முறை இந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வரை இந்த புதுப்பிக்கும் அங்கீகாரங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரடியாக பள்ளிகளின் நிர்வாகிகளிடம் வழங்கி வந்தார். ஆனால், வரும் 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்து வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். இடையில் கொரோனா பாதிப்பு வந்ததால் இந்த பணி தேக்கம் அடைந்துவிட்டது.

இதற்கிடையே, ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவதற்கு பதிலாக 3 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று கேட்டு தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் போராட்டம், உண்ணாவிரதம் என்று பலகட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால், இதற்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 20 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநிலபாடத்திட்டத்தில் இருந்து மத்திய பாடத்திட்டத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அவையும் மாநில அரசிடம் என்ஓசி கேட்டு காத்திருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் மேற்கண்ட 20 ஆயிரம் பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளின் அங்கீகாரம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தற்போது அவற்றின் அங்கீகாரம் புதுப்பித்தால் தான் அடுத்த கல்வி ஆண்டில் அந்த பள்ளிகள் இயங்க முடியும். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது அங்கீகாரம் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், கட்டண கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன், 26ம் தேதி வரை தனியார் பள்ளிகளுக்கு கெடு வைத்துள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள விண்ணப்பிக்கும் போது இணைத்து அனுப்ப வேண்டிய சான்றுகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிக்கான அங்கீகார சான்றும் ஒன்று. தற்போது மே மாதத்துடன் பெரும்பாலான பள்ளிகளின் அங்கீகாரத்துக்கான அவகாசம் முடிந்துள்ளதால், அந்த பள்ளிகள் எப்படி விண்ணப்பிப்பார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, 3 ஆண்டுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், ஒன்றரை ஆண்டுக்கு அங்கீகாரம் புதுப்பித்து தருகிறோம் என்று அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, 26ம் தேதிக்குள் அங்கீகாரம் புதுப்பித்து தர வேண்டும்  அல்லது விண்ணப்பிக்கும் தேதியை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் எதிர்பார்க்கின்றன. இது குறித்து கட்டண குழு என்ன முடிவு எடுக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.


Tags : Schools ,Corona Curriculum Delay Cannot , Corona curfew, delay, school fees, can not be determined, fee setting committee, problem
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்