×

கொரோனா வைரஸ் இருக்கா... இல்லையா என்ற சோதனையில் அரசு மருத்துவமனை மையத்தில் பாசிடிவ், தனியார் பரிசோதனை மையத்தில் நெகடிவ்: கலவர ரிசல்ட்டால் கலக்கத்தில் கர்ப்பிணி; வீட்டு தனிமையில் வாடும் கொடுமை

சென்னை : கர்ப்பிணி ஒருவருக்கு அரசு மற்றும் தனியார் சோதனை மையத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் வெவ்வேறு முடிவுகள் வந்துள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி என்ன செய்வது என்று தெரியாமல் வாடி வருகிறார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது கர்ப்பிணிப் பெண், தனது 2வது பிரசவத்திற்காக அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஜூலை 23ம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டது. முன்னதாக கடந்த ஜூலை 16ம் தேதி கர்ப்பிணி பெண்ணிற்கு அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பாசிட்வ் என்று கடந்த 18ம் தேதி வந்தது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் அன்றைய தினமே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் வீட்டில் கிருமி நாசினி தெளித்து, கொரோனோ பாதிக்கப்பட்ட  தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.இந்நிலையில் எந்த வித அறிகுறி இல்லாத காரணத்தால் சந்தேகம் அடைந்த கர்ப்பிணி பெண் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனைக்கு மாதிரிகளை அளித்தார். குறிப்பாக மாநகராட்சி சார்பில் முடிவுகள் தெரிவித்த அன்றைய தினமே (18ம் தேதி) தனியார் மருத்துவமனையின் சோதனை செய்ய மாதிரிகளை அளித்தார்.இந்த சோதனை முடிவுகள் 19ம் தேதி வெளியானது. இந்த சோதனையின்படி அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

இதனால் குழப்பம் அடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவர் இருவரும்  சிகிச்சை பெற்றுவந்த அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் உரிய விளக்கத்தை அளிக்காமல் உடனடியாக மருத்துவமனையில் சேர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த குழப்பத்தால் அரசு சார்பில் எடுக்கப்பட்ட சோதனையில் பாசிடிவ் என்றும், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சோதனையில் நெகடிவ் என்று முடிவு வந்த காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு உரிய முறையில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : testing center ,government hospital , Corona virus, test, government hospital, positive, private test, negative, riot result, pregnant, home isolation
× RELATED காலி இடத்தை சுத்தம் செய்யும்போது...