×

மொத்த பழியையும் ெகாரோனா மேல போடாதீங்க… பெட்ரோல், டீசல் விலை உயர்வும் பொருளாதார வளர்ச்சிக்கு தடைதான்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானியர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2 வாரம் முன்பு கூறியிருந்தார். உண்மையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொருளாதார மீட்சிக்கான கதவுகளை அடைத்து முட்டுக்கட்டை போட்டுவிட்டது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்துறையினர்.  கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியதால் மத்திய, மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்தது. நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட அரசுகளுக்கு, வரி உயர்வுதான் கண்கண்ட பலனாக தெரிந்தது.  கடந்த மே மாதம், ஒரு லிட்டர் டீசலுக்கு 13, பெட்ரோலுக்கு 10 என கலால் வரியை உயர்த்தி, மாநிலங்களுக்கு வழிகாட்டியது மத்திய அரசு. இது விற்பனை விலையில் எதிரொலிக்கவில்லை என்றாலும், கச்சா எண்ணெய் விலை குறைப்பு பலன் மக்களுக்கு கிடைக்காமல் தடுத்து விட்டது.  

கொரோனா பரவலால் கடந்த மார்ச் 16 முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியை உயர்த்தியபோதுதான் விலை உயர்ந்தது. தமிழகத்தில் வரியை உயர்த்தியதால், சென்னையில் கடந்த மே 4ம் தேதி பெட்ரோல் 3.26 உயர்ந்து  75.54 ஆகவும், டீசல் 2.51 உயர்ந்து ₹68.22 ஆகவும் அதிகரித்தது. இதன்பிறகு ஜூன் 5ம் தேதி வரை விலையில் மாற்றம் இல்லை.  கச்சா எண்ணெய் விலை குறைந்த போது விலையை குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் 6 முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கின. தற்போது வரை, மாநில அரசின் வரி உயர்வு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை சேர்த்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 11.35, டீசல் 12.79 அதிகரித்துள்ளது. இதனால் சரக்கு போக்குவரத்து, விவசாயம், வாகன விற்பனை, சுற்றுலா துறை என வரிசையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

  கச்சா எண்ெணய் விலை நிலவரத்தை ஆய்வு செய்யும் அமைப்பின் நிபுணர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் இருந்தே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெரும்பாலான நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தன. ஆனால், இதிலும் லாபம் பார்க்க விலையை உயர்த்தியது இந்தியாதான். இதனால் ஊரக பகுதிகளில் தேவை குறைந்து விடும். பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமான டீசல் விலை உயர்வது, எதிர்மறை பாதிப்பையே ஏற்படுத்தும்’’ என்றார்.  நாட்டின் சரக்கு போக்குவரத்தில், 3ல் 2 பங்கு சரக்குகள் டிரக், லாரிகள் மூலமாகத்தான் கொண்டு செல்லப்படுகின்றன. விவசாயம், கட்டுமானம் மட்டுமின்றி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் பாதிக்கப்படும்.

 இதனால் ஏற்படும் கூடுதல் செலவு வாடிக்கையாளர்கள் தலையில்தான் விடும். இதுபோல், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் விலையும் உயரும். அதோடு, நடுத்தர மக்களின் சேமிப்பை குறைத்து விடும்.  அப்படி இருக்கும்போது, சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல என பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.

பெரும்பகுதி வரிதான்
பெட்ரோல் டீசலில் பெரும்பகுதி வரிதான். மத்தியில் 2014ல் பாஜ ஆட்சிக்கு வந்தபோது கலால் வரி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.20. தற்போது சாலை வரி சேர்த்து 32.98. டீசல் கலால் வரி 2014ல் 3.46. தற்போது சாலை வரி சேர்த்து  31.83. டெல்லியில் பெட்ரோல், டீசல்கலால் வரி 30%. தமிழகத்தில் வாட் வரி பெட்ரோலுக்கு 34%, டீசலுக்கு 25% என இருந்தது. இதை பிரித்து பெட்ரோலுக்கு 15% மற்றும் 13.02, டீசலுக்கு 11%  மற்றும்  9.62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் 3.26, டீசல் 2.51 உயர்ந்தது. பெட்ரோல், டீசலில் பாதிக்கும் மேல் வரி, கமிஷன்தான் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அரசுகளுக்குதான் கொள்ளை லாபம்.

டீசலுக்கே பாதி செலவு; விவசாயிகள் கொதிப்பு
ஊரடங்கில் விவசாயம் மட்டுமே பொருளாதார ஏற்றத்துக்கு ஆதாரமாக திகழ்ந்துள்ளது. ஆனால், டீசல் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான். உழுவது, விதைப்பு, மருந்து தெளித்தல் போன்றவற்றுக்கு விவசாயிகள் பலர் இயந்திரத்தைதான் பயன்படுத்துகின்றனர். டீசல் விலை உயர்வால் இந்த செலவு அதிகரித்து விட்டது. சாகுபடி செலவில் 50 சதவீதம் டீசலுக்கு போய்விடுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

விவசாயிகளால் அரசுக்குடீசல் வரி வருவாய் 1 லட்சம் கோடி
பாரத் கிரிஷக் சமாஜ் தலைவர் அஜய் வீர் ஜாக்கர் கூறுகையில், ‘‘டீசல் பயன்பாடு மூலம் ஒரு விவசாயி சராசரியாக ஏக்கருக்கு 2,500 வரி செலுத்துகிறார். இந்த தோராய கணக்குப்படி, கடந்த 6 ஆண்டுகளில் விவசாயிகள் மூலம் அரசுக்கு கிடைத்த வரி வருவாய் சுமார் 1 லட்சம் கோடி’’ என்றார். விதைப்புக்கு ஒரு மணி நேரத்துக்கு 400 முதல் 500 வரை கூடுதலாக செலவாகலாம் என விவசாயிகள் பலர் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோமொபைல் மீண்டுவர நாலு வருஷம் ஆகுமாம்
ஆட்டோமொபைல் துறை 5 ஆண்டாக ஏதோ ஒரு வகையில் பாதிப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கில் படு மோசம். தற்போது பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்ந்தால், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 50 முதல் 60% விற்பனை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கு பிறகு தொடர் சரிவுதான். பழைய நிலைக்கு மீண்டும் வர 3 முதல் 4 ஆண்டு ஆகலாம் என்கிறது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம்.

* 2011-12 நிதியாண்டில் அதிகபட்சமாக மார்ச் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 123.61 டாலர். அந்த ஆண்டில் பெட்ரோல் ஒரு லிட்டர் 58.37 முதல் 68.64 வரையிலும், டீசல் 37.75 முதல் 41.29 வரையிலும் இருந்தது.
* மத்தியில் பாஜ அரசு அமைந்த பிறகு, கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 2011 கச்சா எண்ணெய் விலையை விட தற்போது பாதிக்கும் குறைவுதான். ஆனால், விற்பனை விலை தொடர்ந்து உயர்கிறது.

சரக்கு போக்குவரத்துதொழிலுக்கு நஷ்டம்
சரக்கு போக்குவரத்து ஏஜென்சி நடத்தும் ஒருவர் கூறுகையில், ‘‘எங்களது இயக்க செலவில் டீசல் 70%. இதனால் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்கள் ஏற்கவில்லை; எங்களாலும் இழப்பை ஏற்க முடியாது. இதனால் பெரும்பாலான டிரக், லாரிகள் கடந்த ஒரு மாதமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

ஜனவரி,
ஜூலையில்
கச்சா எண்ணெய்,
பெட்ரோல்
விலை ஒப்பீடு

2020 ஜனவரி 1    2020 ஜூலை 18
ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை (டாலரில்)
67 டாலர்    43.11 டாலர்*
2020 ஜனவரி 1    2020 ஜூலை 18
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு
71.40    75.02

2020 ஜனவரி 1    2020 ஜூலை 18
இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விலை
4784    3234
2020 ஜனவரி 1    2020 ஜூலை 18
1 பேரல் கச்சா எண்ணெய்
159 லிட்டர்    159 லிட்டர்

2020 ஜனவரி 1    2020 ஜூலை 18
ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்
30.08    20.34

2020 ஜனவரி 1    2020 ஜூலை 18
பெட்ரோல் விலை (சென்னை)
78.37    83.63



Tags : rise ,Corona , Petrol, Diesel, Inflation, Corona
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி சென்னையில் மீன் விலை உயர்ந்தது