×

கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் குறித்து கணக்கெடுப்பு: நாளைக்குள் அனுப்ப பதிவாளர் உத்தரவு

சேலம்: கொரோனா காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் குறித்து கணக்கெடுத்து நாளைக்குள்  அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 13ம்தேதி இரவு அனைத்து மண்டல கூட்டுறவு அதிகாரிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னையில் இருந்து வாய்மொழி உத்தரவு வந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நகைக்கடன் நிறுத்தப்பட்டது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி,‘‘கூட்டுறவு வங்கிகளில் நிதி நிலைமைக்கு ஏற்ப நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும், நகைக்கடன் நிறுத்தப்படவில்லை எனவும்  தெரிவித்தார்.

இதனிடையே, கொரோனா காலத்தில் விதிமுறையை மீறி கூட்டுறவு வங்கிகளில்  70 லட்சம் வரை நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் இருந்து அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,‘‘கூட்டுறவு கடன் நிறுவனங்கள் மூலம் 2020 ஏப்ரல் 1ம்தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வழங்கப்பட்ட பொது நகைக்கடன் மற்றும் ஜூன் 30ம் தேதி வரை நிலுவையில் உள்ள பொது நகைக்கடன் விவரங்களை 20ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மாவட்ட வாரியாகவும், மண்டல இணைப்பதிவாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர்கள்  கூட்டுறவு சங்கங்கள்,தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் போன்றவை கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாரியாகவும் விவரங்களை அனுப்ப வேண்டும்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கொரோனா காலத்தில் கூட்டுறவு வங்கிகள் வழங்கிய நகைக்கடன் விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். மேலும், நிலுவையில் உள்ள கடன் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.  இது குறித்து கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ₹20
லட்சத்துக்கு மேல் வழங்கக்கூடாது. ஆனால் கொரோனா காலத்தில் ஒரு வருக்கே 70 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர், சங்ககிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர்  40 கிராம் நகை வைத்து லட்சக்கணக்கில் கடன் பெற்றுள்ளனர். இந்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : Banks ,Corona Curfew: Registrar's Order , Corona, curfew, cooperative banks, jewelry
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்