×

தமிழகத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு ஒரேநாளில் 79 பேர் பலி: இறப்பு எண்ணிக்கை 2,315 ஆனது

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 79 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் 1,376 பேரும், மற்ற மாவட்டங்களில் 939 பேர் என இதுவரை 2,315 பேர் உயிரிழந்துள்ளனர்.  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் தினசரி ஆயிரம் பேருக்கு மட்டும் கொரோனா கண்டறியப்படுகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களை சேர்த்து தினசரி 3 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 4,538 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,243 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 3,295 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 48,669  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேரும், அரியலூர் 10, செங்கல்பட்டு 125, கோவை 141, கடலூர் 44, தர்மபுரி 40, திண்டுக்கல் 163, ஈரோடு 3, கள்ளக்குறிச்சி 58, காஞ்சிபுரம் 110, கன்னியாகுமரி 151, கரூர் 12, கிருஷ்ணகிரி 17, மதுரை 263, நாகப்பட்டினம் 2, நாமக்கல் 46, நீலகிரி 52, பெரம்பலூர் 9, புதுக்கோட்டை 75, ராமநாதபுரம் 82, ராணிப்பேட்டை 55,

சேலம் 61, சிவகங்கை 81, தென்காசி 65, தஞ்சாவூர் 117, தேனி 175, திருப்பத்தூர் 8, திருவள்ளூர் 220, திருவண்ணாமலை 145, திருவாரூர் 15, தூத்துக்குடி 189, நெல்லை 119, திருப்பூர் 28, திருச்சி 100, வேலூர் 183, விழுப்புரம் 113, விருதுநகர் 196 என தமிழகத்தில் வசித்தவர்கள் 4,463 பேருக்கும், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 75 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 2,755 பேர் ஆண்கள், 1,783 பேர் பெண்கள். தற்போது வரை 98,063 ஆண்கள், 62,821 பேர் பெண்கள், 23 திருநங்கைகள்.

மேலும் நேற்று 3,391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 47,782 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 பேருமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 36 பேரும், பிற மாவட்டத்தை சேர்ந்த தேனி 1, சிவகங்கை 2, செங்கல்பட்டு 7, திருச்சி 3, திருவண்ணாமலை 4, வேலூர் 3, ராணிப்பேட்டை 1, தூத்துக்குடி 1, திருவள்ளூர் 5, கோவை 5, திருப்பத்தூர் 1, ராமநாதபுரம் 4, காஞ்சிபுரம் 1, மதுரை 4, விழுப்புரம் 1 என 79 பேர் அடங்குவர். மேலும் நேற்று முன்தினம் 69 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று அதிகபட்சமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக கூறினாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அதன்படி சென்னையில் இதுவரை 1,376 பேரும், மற்ற மாவட்டங்களில் 939 பேர் என 2,315 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்து விட்டது என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்தாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

16 நாளில் 1051 பேர்
தமிழகத்தில் ஜூலை 1ம் தேதி வரை 1,264 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்த நிலையில் கடந்த 16 நாட்களில் 1,051 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் கடந்த ஜூலை 1ம் தேதி வரை 929 பேர் உயிரிழந்தனர். கடந்த 16 நாட்களில் மட்டும் 447 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் இதுவரை 2,315 பேரும், சென்னையில் 1,376 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona, Curfew
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...