×

ஒரே பயிற்சி மையத்தில் படித்த 144 பேர் எஸ்.ஐ. பணிக்கு தேர்வு: முறைகேடு நடந்ததாக ஐகோர்ட்டில் வழக்கு

மதுரை: ஒரே பயிற்சி மையத்தில் பயின்ற 144 பேர் எஸ்.ஐ. பணிக்கு தேர்வாகி உள்ளனர். முறைகேடு நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   மதுரை மாவட்டம், மேலூர் அய்வத்தான்பட்டியைச் சேர்ந்த தென்னரசு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழகத்தில் காலியாகவுள்ள 969 எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த 8.3.2019ல் வெளியானது. எழுத்து தேர்வு, உடல் தகுதித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

 கடந்த ஜன.12 மற்றும் 13ல் எழுத்துத்தேர்வு நடந்தது. எழுத்துத்தேர்வின் முடிவுகள் மார்ச் 16ல் வெளியானது. இதில், ஒரே தேர்வு மையத்தில் இருந்து அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு மையங்களில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை. தேர்ச்சி பெற்றவர்களில் 144 பேர் குறிப்பிட்ட சில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தொடர்ச்சியான வரிசையான எண்கள் வழங்கப்பட்டுள்ளன. 969 காலிப்பணியிடங்களுக்கு ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்வு ஆகியுள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததைப்போல எஸ்.ஐ. பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. இத்தேர்விலும் சிலர் முகவரியை மாற்றிக் கொடுத்து வெளிமாவட்டங்களில் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, எஸ்.ஐ. தேர்வுக்கான அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இதற்காக நடந்த எழுத்துத்தேர்வு செல்லாது என அறிவித்து, புதிதாக முறைப்படி அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Tags : training center ,SIs ,Case ,court , Only training center, 144 SIs. Selection for the job, iCourt
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...