×

தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கும்பகோணத்தில் 15,000 கடைகள் அடைப்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டத்தில் இருந்து குடந்தை, பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டையை புதிய தாலுகாவாக உருவாக்க வேண்டுமென கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  கடந்தாண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் வருவாய்த்துறை அமைச்சர், கும்பகோணத்தை மாவட்டமாக அமைப்பது பரிசீலனையில் உள்ளது என்றார். இருப்பினும் அதன்பிறகு பல புதிய மாவட்ட அறிவிப்பு வெளியானது. அதில், கும்பகோணம் பெயர் இடம் பெறவில்லை.

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்ககோரி கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்தது.  இந்நிலையில் போராட்டக்குழு சார்பில் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் கும்பகோணம், திருவிடைமருதூர், நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், சோழபுரம், சுவாமிமலை, ஆடுதுறை, பாபநாசம் உள்ளிட்ட பகுதியில் 15 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  இதனால் கும்பகோணம் நகரில் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.   இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக எந்த மாவட்டமும் அமைக்கப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : shops ,Kumbakonam ,district , Separate district, Kumbakonam, 15,000 shops closed
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!