×

சர்க்கஸ்களில் விலங்குகளை காட்சிப்படுத்துவதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு

டெல்லி: விலங்குகள் நல இயக்கமான பீட்டா அமைப்பு சர்க்கஸ்களில் விலங்குகளைக் காட்சிப்படுத்துவதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பீட்டா அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், ‘விலங்குகளுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவது, பார்வையாளர்களைக் மகிழ்விக்க விலங்குகளை துன்புறுத்துவது உட்பட சர்க்கஸ்களில் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இது விலங்குகளுக்கு கொடுமை இழைப்பதை எதிர்க்கும் 1960-ம் ஆண்டு சட்டத்தை மீறுவதாக உள்ளது. இதோடு விலங்குகளை காட்சிப்படுத்தி பலவற்றையும் அதைக்கொண்டு நிகழ்த்திக் காட்டுவதற்கு எதிரான 2001ம் ஆண்டு சட்டத்தையும். 1972ம் ஆண்டு வனவிலங்குகள் சட்டம், விலங்குக் காட்சி சாலை அங்கீகார விதிமுறைகள் 2009 ஆகியவற்றையும் மீறுவதாக உள்ளது. மேலும் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் கிருமிகளை விலங்குகள் கொண்டுள்ளது. எனவே இதைக் காட்சிப்படுத்துவது மனிதர்களிடையே கிருமிகளைப் பரப்புவதற்கும் இடமளிக்கும்.

யானைகள் டிபி கிருமியைச் சுமந்து கொண்டிருப்பது நாம் அறிந்ததே. குதிரைகள் கிளாண்டர்சை என்ற ஒருவகையான நோயைச் சுமந்து கொண்டிருக்கிறது. பறவைகளிடத்தில் ‘சிட்டாகோசிஸ்’ என்ற கிளிக்காய்ச்சல் கிருமி, ஒட்டகங்களிடத்தில் ஒட்டக அம்மை, மெர்ஸ் வைரஸ் ஆகியவற்றுடன் இருக்கின்றன. அதேபோல் கோவிட்-19 வைரஸும் வன விலங்குகளிடமிருந்து மனிதர்களைத் தொற்றியதாக அறியப்பட்டுள்ளது. எனவே பொலீவியா, போஸ்னியா, ஹெர்செகோவினா, சைப்ரஸ், கிரீஸ், கவுத்தெமாலா, இத்தாலி, மால்டா ஆகிய நாடுகளில் சர்க்கஸ்களில் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்க்கஸில் விலங்குகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், தொடர்ந்து கூண்டிலும் அடைக்கப்பட்டு எந்த வித மருத்துவ உதவியும் அளிக்கப்படாமல் பராமரிக்கப்படுகின்றன. போதிய நீர், உணவு, பொருத்தமான தங்குமிடம் இல்லாமல் அவதிப்படுத்தப்படுகின்றன. மேலும் அவை கடுமையான நிகழ்த்துதலுக்கு ஆட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகின்றன. எனவே சர்க்கஸில் தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் விலங்குகள் சரணாலயத்துக்கோ மறுவாழ்வு மையத்துக்கோ அனுப்பப்பட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளது.



Tags : Delhi High Court ,circuses ,Peta , Peta, Animals
× RELATED அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி...