×

கொரோனா காலத்தில் மணல் கொள்ளையை தடுக்க வருகிறது டிரோன் படை!: தமிழக பொதுப்பணித்துறை அதிரடி திட்டம்!

சென்னை: தமிழகத்தில் மணல் கொள்ளையை தடுக்க டிரோன் படை அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. சட்டவிரோத மணல் குவாரிகளை கட்டுபிடிக்கவும், மணல் மாஃபியா கும்பலை விரட்டி அடிக்கவும் டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் கொள்ளைபோகும் கனிம பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மணல் தான். மணல் கொள்ளையை தடுக்க அரசே குவாரிகளை திறந்தாலும் மணல் மாஃபியாக்களின் கடத்தல் குறைந்தபாடில்லை.

மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகளை லாரி ஏற்றி கொலை செய்வது, கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை லஞ்சத்தால் வளைப்பது போன்ற முறைகேடுகள் தொடர்கின்றன. தற்போது விழுப்புரம், வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 இடங்களில் அரசின் மணல் குவாரிகள் செயல்படுகின்றன. அதற்கு போட்டியாக சட்டவிரோத குவாரிகளும் செயல்படுகின்றன. அதனை தடுக்கவும், மணல் கடத்தல் கும்பலை விரட்டி பிடிக்கவும் டிரோன்களை பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆற்று படுகையிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை வரவேற்றுள்ள மணல் லாரி உரிமையாளர்கள், கொரோனா காலத்திலும் மணல் விலை குறையாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் விலையை குறைக்கவும், அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். ஒவ்வொரு குவாரியிலும் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு மணல் அள்ளப்படுகிறதா? அல்லது விதிமீறல் நடக்கிறதா? என்பதையும் டிரோன்கள் கண்காணிக்கும்.

மணல் தேவையை கருத்தில் கொண்டு திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் மணல் குவாரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக சுற்றுச்சூழல்த்துறையின் அனுமதியை பொதுப்பணித்துறை எதிர்நோக்கி உள்ளது. அந்த இடங்களிலும் டிரோன்கள் கண்காணிப்பு நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்கான தொழிற்நுட்ப உதவியை அண்ணா பல்கலைக் கழகத்தின் கலாம் ஆளில்லா விமான ஆராய்ச்சி பிரிவு அளித்துள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணி, ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் வேட்டை போன்றவற்றில் அண்ணா பல்கலைக் கழகம் வடிவமைத்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து இப்போது மணல் கொள்ளை தடுப்பு பணியிலும் டிரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Drone force ,Corona , Drone force is coming to prevent sand looting during the Corona period !: Tamil Nadu Public Works Action Plan!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...