×

உ.பியில் பிராமணர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் செயல்கள் அரங்கேற்றம்; சாதி அரசியலை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் : மாயாவதி சாடல்

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் டிஎஸ்பி, ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் என 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ம.பி.,யில் பதுங்கி இருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டார். அவரை கான்பூருக்கு அழைத்து செல்லும் வழியில் மழை காரணமாக கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி துபே தப்பிக்க முயன்றுள்ளார். போலீசாரிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 4 போலீசார் காயமடைந்து உள்ளனர். இதன் காரணமாக போலீசாரால் துபே என்வுண்டரில் சுட்டுக்கொல்லப் பட்டதாக மேற்கு கான்பூர் எஸ்.எஸ்.பி., தினேஷ்குமார் உறுதிசெய்து இருந்தார்.

இந்த நிலையில், என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விகாஸ் துபே பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள மாயவாதி, உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்களை அச்சுறுத்தும் செயல்கள் அரங்கேறி வருவதாகவும் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் செயல்கள் நிகழ்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். சாதி அரசியல் செய்வதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசம் மக்கள் தொகையில் 10% அதிகமானோர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பட்டியலினத்தவருக்கு சமமாக அம்மாநில அரசுகளை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக பிராமணர்கள் விளங்குகிறார்கள். இதனால் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, தேர்தல்களில் பிராமணர்களுக்கு என்று அதிக இடங்களை ஒதுக்கி அவர்களின் வாக்குகளை கவர முயற்சிக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

Tags : Mayawati Sadal ,UP ,BJP ,Brahmins , UP, Brahmins, Violent, Caste Politics, BJP, Mayawati, Sadal
× RELATED உணவகங்களில் உரிமையாளர் பெயர் எழுதும்...