×

உணவகங்களில் உரிமையாளர் பெயர் எழுதும் விவகாரம் பா.ஜ அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை


புதுடெல்லி: உணவகங்களில் உரிமையாளர் பெயர் எழுத உத்தரவிட்ட உபி, உத்தரகாண்ட் பா.ஜ அரசுகளின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் வரை யாத்திரை செல்வார்கள். கன்வார் யாத்திரை என்று அழைக்கப்படும் இந்த பயணத்தின் போது பக்தர்கள் வசதிக்காக முக்கிய இடங்களில் உணவகம் மற்றும் பல்வேறு கடைகள் திறக்கப்படும். இந்த ஆண்டு கன்வார் யாத்திரை பாதையில் அமைக்கப்படும் கடைகளில் உரிமையாளர் பெயர், முகவரி, செல்போன் எண் எழுதும்படி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் அரசுகள் திடீர் உத்தரவு பிறப்பித்தன.

இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி, மஹுவா மொய்த்ரா, கல்வியாளர் அபூர்வானந்த் ஜா, கட்டுரையாளர் ஆகர் படேல், சிவில் உரிமைகள் பாதுகாப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிருஷிகேஷ்ராய், எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது,’இந்த விஷயத்தில் ஏதேனும் முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதா’ என்று மஹுவா மொய்த்ரா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது,’உணவகங்களின் உரிமையாளர்களின் பெயர்களைக் எழுத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உபி, உத்தரகாண்ட் அரசுகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கன்வார் யாத்திரைகள் பல ஆண்டுகளாக நடத்தப்படுகின்றன. அங்கு இந்துக்களால் நடத்தப்படும் பல சைவ ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் முஸ்லிம் மற்றும் தலித் ஊழியர்கள் உள்ளனர். நான் ஹரித்வாருக்கு பலமுறை சென்றிருக்கிறேன். இந்துக்கள் நடத்தும் சுத்த சைவ உணவகங்கள் நிறைய உள்ளன. அவர்களிடம் முஸ்லிம் அல்லது தலித் ஊழியர்கள் இருந்தால், அவர்கள் உணவை தொட்டதால், நான் அங்கு சென்று சாப்பிட மாட்டேன் என்று சொல்ல முடியுமா?. இந்த உத்தரவுகள் சட்டத்தின் எந்த அதிகாரமும் இல்லாமல் பிறப்பிக்கப்படுகின்றன’ என்றார்.

அப்போது நீதிபதிகள்,’கன்வார் பக்தர்கள் சிவனை வழிபடுகிறார்கள். அவர்கள் உண்ணும் உணவை ஒரு குறிப்பிட்ட சமூகம் சமைத்து பரிமாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா?’ என்று கேள்வி எழுப்பினர். அதன்பின் கன்வர் யாத்ரா வழித்தடங்களில் உள்ள உணவகங்களில் அவற்றின் உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பிற விவரங்களை வெளியிட வேண்டும் என்று பாஜ ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே போல் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகராட்சியிலும் இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மபி அரசுக்கு தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்,’ உபி, மபி, உத்தரகாண்ட் அரசுகள் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்துவதைத் தடைசெய்து இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். வேறுவிதமாகக் கூறினால், உணவு விற்பனையாளர்கள் உணவு வகைகளை காட்சிப்படுத்த வேண்டும். ஆனால் உரிமையாளர்கள், பணியாளர்களின் பெயர்களை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை வெள்ளிக்கிழமை பட்டியலிட உத்தரவிட்டனர்.

* உச்சநீதிமன்ற தடைக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு

கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்களின் பெயர்களை எழுத உத்தரவிட்ட உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநில உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்க்கட்சிகள் வரவேற்றன. இந்த வழக்கை தொடர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறுகையில்,’ உ.பி.யில் தொடங்கப்பட்ட முற்றிலும் சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான கன்வர் யாத்திரை உத்தரவை நாங்கள் நிறுத்திவிட்டோம். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், அனைத்து மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்’ என்றார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில்,’ உணவகங்களுக்கான உத்தரவும், அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கும் முடிவும் பாஜவின் விரக்தியைக் காட்டுகிறது. வகுப்புவாத அரசியல் அதன் இறுதிக்கட்டத்தில் உள்ளது. அதனால்தான் இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அவர்கள் இன்னும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பார்கள்’ என்றார். சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில்,’ உச்சநீதிமன்ற தீர்ப்பை எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து வரவேற்கிறேன். அவர்கள் அரசியல் சாசனத்தை பாதுகாத்துள்ளனர்’ என்றார்.

* ராஜதர்மம் குறித்து மோடி பாடம் எடுப்பார்

காங்கிரஸ் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கெரா கூறுகையில்,’உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளின் அரசியல் சட்டத்திற்கு முரணான உத்தரவுகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தடையை நாங்கள் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றம் இவ்வளவு வலுவான உத்தரவை வழங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் பிரதமர் தனது கட்சியின் முதல்வர்களுக்கு ராஜதர்மம் பற்றி பாடம் எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக அவர் குஜராத் முதல்வராக இருந்த போது அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மோடியை ராஜ தர்மத்தை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் வாஜ்பாய் உத்தரவை மீறிவிட்டார். இப்போது அவரது முதல்வர்கள் அவரை மீற மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்றார்.

* கேரள முஸ்லிம் ஓட்டலில் சர்வதேச தரத்தில் சைவ உணவு நீதிபதி எஸ்விஎன் பட்டி புகழாரம்

உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என்.பட்டி கூறுகையில்,’ கேரளாவில் ஒரு முஸ்லிம் நடத்தும் சைவ உணவகத்திற்கு நான் அடிக்கடி செல்வேன். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பதால் வெளிப்படையாக கூற முடியவில்லை. உணவு தரம் மற்றும் பாதுகாப்பு என்று வரும்போது, ​​அவர் எல்லாவற்றையும் காட்சிப்படுத்தினார். அவர் துபாயில் இருந்து திரும்பியிருந்தார். அவர் தனது உணவகத்தில் சர்வதேச தரத்தை பராமரித்து வந்தார். எனவே எப்போதும் அந்த ஓட்டலுக்கு செல்வது எனது விருப்பம்’ என்றார். அப்போது வக்கீல் அபிஷேக் சிங்வி கூறுகையில்,’நீங்கள் மெனு கார்டை தேர்வு செய்தீர்கள். அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பெயரை அல்ல. ஆனால் உபி, உத்தரகாண்ட் அரசுகளின் உத்தரவுகளின் விளைவாக, உணவகங்களின் சில ஊழியர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்றார்.

The post உணவகங்களில் உரிமையாளர் பெயர் எழுதும் விவகாரம் பா.ஜ அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,UP ,Uttarakhand ,BJP ,Shiva ,Delhi ,Kanwar Yatrai ,BJP Government ,
× RELATED தாமரை சின்னத்துக்கு தடை கோரிய மனுவை...