×

தொடரும் ஊரடங்குகளால் பட்டாசுத் தொழில் முடக்கம்: ‘குட்டி ஜப்பானில்’ ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு அபாயம்

* வடமாநில ஆர்டர்கள் வராததால் மத்தாப்புகள் தேக்கம்  
* இன்று முதல் ஜூலை 19 வரை ஆலைகளை மூட முடிவு

சிவகாசி:  கொரோனா ஊரடங்கால் வட மாநிலங்களில் இருந்து போதிய  ஆர்டர்கள் வராததால் இன்றுமுதல் ஜூலை 19ம் தேதி வரை பட்டாசு ஆலைகள்   மற்றும்  கடைகளை மூடுவது என பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர் சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன. ‘குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படும் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்து 70க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் பட்டாசுள் இந்தியா முழுவதிலும் விற்பனைக்கு அனுப்படுகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

அத்துடன் பட்டாசு உற்பத்தி சார்ந்த சார்பு தொழில்களான அச்சு, அட்டைபெட்டி தயாரித்தல், குழாய் டியூப், கெமிக்கல், பேக்கேஜிங், ஸ்கோரிங், கட்டிங் போன்ற தொழில்களிலும் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநில வியாபாரிகள் தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு சில மாதங்களில் அடுத்த ஆண்டுக்கான ஆர்டர்கள் வழங்கி முன்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆர்டரின் பேரில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் உற்பத்தி பணியில் ஈடுபடுவார்கள். கொரோனா காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து 41 நாட்கள் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.  இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி அவதிபட்டனர்.

ஆலை உரிமையாளர்கள் முன்பணம் மற்றும் இலவசமாக அரிசி மற்றும் உணவு பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்கினர். கொரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் பட்டாசு ஆலைகள் சில தளர்வுகளுடன் திறக்கப்பட்டன. ஆலைகளில் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். தொழிலாளர்கள் வாகனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்திய அளவில் கொரோனா தொற்று  பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால்  ஊரடங்கை மத்திய அரசு அடுத்தடுத்து நீட்டித்தது. தற்போது ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் 80 சதவீதம் வட மாநிலங்களில் விற்பனை செய்யப்படுவையாகும். திருமண நிகழ்ச்சி, ஹோலி பண்டிகை  போன்ற முக்கிய பண்டிகைக்கு  பட்டாசுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் திருமண நிகழ்ச்சி, பண்டிகைகள் கொண்டாட தடை விதிக்க பட்டதால் போதிய அளவில் பட்டாசு விற்பனையாகவில்லை. இதனால் வட மாநில வியாபாரிகள் பட்டாசுகளை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்களை வடமாநில வியாபாரிகள் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வழக்கமான மனநிலையுடன் கொண்டாடப்படுமா என்ற சந்தேகத்தில் வடமாநில வியாபாரிகள் போதிய அளவில் ஆர்டர்கள் வழங்கவில்லை. இதனால் சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் அனைத்தும் தேக்கமடைந்துள்ளன.

பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு சம்பளம்  போட முடியாமல் அவதிப்படுகின்றனர். பட்டாசு ஆலைகளுக்கு தேவையான வெடிஉப்பு, சிலபன் போன்ற மூலப்பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து சப்ளை செய்யப்படுகிறது.  ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பட்டாசுக்கான மூலப்பொருட்கள் கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை பயன்படுத்தி வியாபாரிகள் பட்டாசு மூலப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளனர். இதனால் பட்டாசு உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சிவகாசியில்  பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம், டிப்மா சங்கம் மற்றும்  பட்டாசு கடை விற்பனையாளர்கள் சங்க அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது.

டான்பாமா  சங்க தலைவர் கணேசன், டிப்மா சங்க தலைவர் பாலாஜி மற்றும் பட்டாசு கடை  விற்பனையாளர் சங்க பொதுச்செயலாளர் இளங்கோவன் உட்பட அனைத்து சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர். கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில்  கொரோனா தொற்று  அதிகளவில் பரவி வருவதால் இன்று முதல் (ஜூலை 9 ) ஜூலை 19ம் தேதி வரை அனைத்து  பட்டாசு ஆலைகள் மற்றும்  கடைகளை மூடுவது என முடிவெடுத்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்?: ஆர்டர்களின்றி பட்டாசு ஆலைகளில் தேக்கமடைந்து கிடப்பதால்  வியாபாரிகள் உற்பத்தி விலையை விட குறைவான விலைக்கு கேட்கின்றனர்.

இதுபோன்ற காரணங்களால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலையை நடத்த முடியாத நிலையில் உள்ளனர். சிலர் ஆலைகளை மூடிவிட்டனர். ஒரு சில ஆலை உரிமையாளர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே ஆலைகளை நடத்தி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுகின்றனர். நவம்பர் மாதம் வரை இந்த நிலைமை நீடித்தால் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி வரை பட்டாசு தொழிலில் இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

Tags : Japan ,Pattacut Industry: 'Little Japan , Curfew, fireworks industry
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!