×

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்; அரசு மருத்துவமனைகளில் குவியும் கர்ப்பிணிகள்: பணிச்சுமையால் தவிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதால் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் பணிச்சுமையால் டாக்டர்கள், செவிலியர்கள் தவித்து வருகின்றனர் உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.14 கோடிக்கும் அதிகமாக உள்ளது. பலி எண்ணிக்கை 5.35 லட்சமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 7.11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் மட்டும் கணக்கிட்டால் 1.14 லட்சத்திற்கும் அதிகமாக பாதிப்பு உள்ளது. 1,500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இப்படி கொரோனா பாதிப்புகளும், உயிர்பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் மட்டுமின்றி டாக்டர்கள் உட்பட மருத்துவத்துறையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவிவருவதால், பெரும்பாலான இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டதால் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள் இயங்காததால் கர்ப்பிணிகள் மாதந்தோறும் மருத்துவமனைக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சாதாரண காய்ச்சல், சளி, இருமல் ெதாடங்கி பிரசவம் வரையில் அரசு மருத்துமனைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அதிகளவில் நோயாளிகள் வருவதால் டாக்டர், செவிலியர்கள் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முன்பு மாதத்திற்கு 80 பிரசவம் பார்த்து வந்த நிலையில் தற்போது ஒரே மாதத்தில் 581 பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இப்படி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக திருப்பத்தூர் மாவட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் பணிச்சுமையால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக புலம்பி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களின் நிலையும் இதுவாகத்தான் உள்ளது. எனவே மருத்துவத்துறையில் டாக்டர்கள், செவிலியர்கள் பணிச்சுமையை குறைக்கும் விதமாக மருத்துவத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை நிரப்ப போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகப்பேறு சிகிச்சை பிரிவில் 3 மருத்துவர்கள்
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் திலீபன் கூறியதாவது: திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் முன்பு மாதத்திற்கு சுமார் 80 பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் மட்டும் 581 பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவீதம் அறுவை சிகிச்சையும் 50 சதவீதம் சுகப்பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. இதில் தாய், சேய் நலமாக உள்ளனர். ஆனால் திருப்பத்தூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் டாக்டர்கள் இல்லை. வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே மருத்துவர் ஒரு இரவில் 20 பிரசவம் பார்த்துள்ளார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 33 டாக்டர்கள் உள்ளனர். அதில் 10 டாக்டர்கள் கொரோனா வார்டிற்கும், மற்ற வார்டுகள் மற்றும் ரத்த வங்கி, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவற்றிற்கு 20 டாக்டர்கள் உள்ளனர். மீதமுள்ள 3 மருத்துவர்கள் மற்றுமே மகப்பேறு வார்டில் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Closure ,hospitals ,Government Hospitals ,Doctors ,Government Hospital ,Nurses Thiruppathur , Thiruppathur, Government Hospital, Pregnant
× RELATED டாஸ்மாக்கை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல்