திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி.. இன்னொரு குறளையும் இதயத்தின் ஓரத்தின் எழுதிவையுங்கள் : கவிஞர் வைரமுத்து!!

சென்னை : இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா - சீன இடையே லடாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் போதும் பிரச்னைக்கு சுமூக நிலைக்கு வரவில்லை. இந்நிலையில் பிரதமர் மோடி திடீரென லடாக் பயணம் மேற்கொண்டு அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு நடத்தினார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.

வீரர்கள் முன் பேசிய பிரதமர் மோடி தமிழில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டார். அதில், மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு என்ற குறளை பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த குறளின் விளக்கம்  வீரம், மானம், முன்னோர் சென்ற வழியை பின்பற்றி செல்லுதல், தலைவனின் நம்பிக்கையைப் பெற்று நடப்பது ஆகியவை ஒரு படையைப் பாதுகாக்கும் பண்புகளாகும் என்பதாகும்.

இந்த நிலையில் பிரதமர் மோடி எல்லையில் திருக்குறள் கூறியது குறித்து கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார். அதில்,

படைவீரர்களுக்கான உரையில்

படைமாட்சி என்ற அதிகாரத்திலிருந்து

திருக்குறளை மேற்கோள் காட்டிய

பிரதமர் மோடிக்கு எங்கள் நன்றி.

‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்

சேரா தியல்வது நாடு’

என்ற இன்னொரு குறளையும்

அவர் இதயத்தின் ஓரத்தில் எழுதிவைக்கிறோம்.

இதன் விளக்கம் என்னவென்றால்,மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது ஒரு நல்ல நாடு., என்பதாகும்.

Related Stories:

>