×

சமூக பரவலில் தவிக்கும் சென்னை மக்கள் கொரோனா தொற்றின் சங்கிலி தொடரை உடைக்கும் முயற்சி நிறுத்தம்? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் யார் மூலம் யாருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கொரோனா பரவல் சமூக பரவலை அடைந்து விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   
 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவல் சென்னையில் தான் கட்டுக்கடங்காமல் உள்ளது. நோய் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தினாலும் தினம்தோறும் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் கான்டாக்ட் டிரேசிங் முறை அமலில் இருந்தது.

அதன்படி, காவல் துறையின் சைபர் கிரைம் மூலம் தொற்றுள்ள நபர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை உடனடியாக கண்டுபிடித்து அந்த நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலில் இருந்தது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. ஆனால் அதன் பின்னர் சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று வீதிக்கு வீதி வந்துவிட்டது. இப்போது யாரிடம் இருந்து யாருக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.

கொரோனா தொற்றால் தற்போது பாதிக்கப்படுபவர்களிடம் கேட்டால், அவர்களுக்கு எப்படி தொற்று வந்தது என்பதே தெரியவில்லை என்கின்றனர். சமூக பரவலை இந்த நோய் அடைந்து விட்டால் யாரிடமிருந்து யாருக்கு பரவுகிறது என்பதை கண்டறிய முடியாது.  வீட்டுக்குள் அடைந்திருந்தாலும் ஏதாவது அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் போது அவர்களுக்கும் இந்த தொற்று பரவும். அதைதான் மத்திய சுகாதாரத்துறை, சமூக பரவல் என்கின்றனர். தமிழகத்தில், குறிப்பாக  சென்னையில் இதேநிலை தான் தற்போது நடந்து வருகிறது. இதனால், தான் சென்னையில் சமூக பரவலை இந்த நோய் தொற்று எட்டிவிட்டது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தமிழக அரசு அப்படி ஒரு நிலை இன்னும் ஏற்படவில்லை என்று மறுத்து வருகிறது. இன்னும் கொரோனா தொற்று கட்டுக்குள்தான் இருப்பதாக கூறி வருகிறது. ஆனால் நிலைமை அப்படி இல்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.  

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறியதாவது:
சென்னையில் கொரோனா தொற்று என்பது கைமீறி சென்று விட்டது. மற்ற மாவட்டங்களை எடுத்துக்கொண்டால் புதிதாக ஒருவர் மாவட்டத்திற்குள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. அதையும் மீறி நுழைந்து விட்டால் கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அடுத்த நொடியே அழைப்பு வந்து விடுகிறது. அந்த அளவுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில் அதுபோன்ற நிலைமை இல்லை. யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் போகலாம்.  

புதிதாக வந்தவர்களை பற்றிய தகவல்களை அரசு கண்டுபிடிப்பது என்பது சவாலான ஒன்றாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆரம்பத்தில் எப்படி கான்டாக்ட் டிரேசிங் செய்தார்களோ அதேபோன்று மீண்டும் அதை செயல்படுத்தினால்தான் இந்நோய்க்கான சங்கிலி தொடரை உடைக்க முடியும். கொரோனா தொற்றின் வேகத்தை தடை செய்ய வேண்டுமானால் சங்கிலி தொடரை உடைப்பது தான் பிரதான மருத்துவம் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த பணியை மீண்டும் தமிழக சுகாதாரத் துறை, காவல் துறையுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்பது சென்னை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவதால் தினமும் 4000 பேர் என்ற அளவில் பாதிப்பு இருக்கிறது. அவர்களை அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்ப்பது, அவர்களுக்கான பரிசோதனை என சுகாதாரத் துறையினரின் பணி சவாலாக உள்ளது. இதனால் தான் கான்டாக்ட் டிரேசிங் எல்லாம் செய்வதற்கு தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. யார் யாருக்கு அறிகுறிகள் உள்ளதோ அவர்களை மட்டுமே அழைத்து சென்று பரிசோதிக்கின்றனர். அவர்கள் இந்நோய்க்கு ஆளாகும் போது யார் மூலம் வந்தது என்பதற்கான விசாரணை நடத்தி அந்த சங்கிலி தொடரை உடைக்க வேண்டும்.

அப்போதுதான் கட்டுக்குள் கொண்டுவர முடியும். தினமும் 4000 பேர் என்ற அளவில் அவர்களை கான்டாக்ட் டிரேசிங் செய்வது என்பது ஒரு சவாலான பணிதான். வீடுவீடாக சென்று பணியாளர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கின்றனர். ஆனால் அறிகுறி இல்லாதவர்கள் தங்கள் அலுவலகங்கள் முதல் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, ஏற்கனவே பின்பற்றிய கான்டாக்ட் டிரேசிங் முறையை தீவிரப்படுத்தி அதற்கேற்றவாறு பரிசோதனைகளையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சென்னையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கூறினர்.

Tags : experts ,Madras ,Madras People , Social Dissemination, Stranded, Madras People, Corona, Stop Trying ?, Medical Experts, Warning
× RELATED பொருளாதாரத்தை மேம்படுத்த...