காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவலம் அப்புறப்படுத்தாமல் வீசப்படும் கொரோனா வார்டு கழிவுகள்: தொற்று பரவும் அபாயத்தால் மக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால், சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவமனை பின்புறம் உள்ள பகுதியில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பகுதியை சுற்றி வைகுண்ட பெருமாள் கோயில் தெரு விரிவு உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் மருத்துவமனை கொரோனா வார்டு நோயாளிகளுக்கு பயன்படுத்திய கழிவு பொருட்கள், வெளிப்பகுதியில் வீசப்படுகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல் துலக்கிவிட்டு கொப்பளித்து உமிழ்வதாலும், அவர்கள் பயன்படுத்திய கழிவு பொருட்களை வீசி எறிவதாலும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, கொரோனா வார்டு உள்ள பகுதியை சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். மருத்துவ கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும். அதனை அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதேநேரத்தில் தொற்று பரவாமல் மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் நகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது என்பதை உணர்ந்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>