×

என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்

புதுடெல்லி: என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஊழியர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனல்மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,  நெய்வேலி என்.எல்.சி.யில் ஏற்பட்ட விபத்து மன வேதனையை அளிக்கிறது. விபத்து தொடர்பாக தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். மத்திய அரசு  அனைத்து உதவிகளும் செய்யும் என உறுதி அளித்தேன். நிவாரண பணிகளுக்காக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தில உள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என கூறியுள்ளார்.


Tags : NLC ,Earliest Recovery for Praying: Amit Shah ,NLC Thermal Power Plant Accident , Neyveli, NLC, accident, Shah
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...