×

கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கிராமப் பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். இதில் மின்சாரத்துறை மற்றும் என்எல்சி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் கோடைக் காலத்தின் போது வெப்பம் புது உச்சத்தைத் தொடும். பல மாவட்டங்களில் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வருகிறது. இதற்குப் பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாகும். இந்த பருவநிலை மாற்றத்தால் அதீத மழை அல்லது அதீத வெப்பம் என்பது போன்ற மிக மோசமான வானிலை நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பொதுவாக வெப்பம் அதிகரித்தாலே மின்சார பயன்பாடு அதிகரிக்கும். பேன், ஏசி ஆகியவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் என்பதால் மின் தேவையும் அதிகரிக்கவே செய்யும். தமிழ்நாட்டிலும் அதில் விதி விலக்கு இல்லை. இன்னும் கோடைக் காலம் ஆரம்பிக்கவில்லை என்ற போதிலும், ஏற்கனவே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் வெப்பம் சதமடிக்க ஆரம்பித்துவிட்டது.

வரும் நாட்களில் மேலும் பல மாவட்டங்களில் அதிகபட்சமாக வெப்பம் பதிவாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கோடைக் காலத்தில் ஏசி, பேன் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், மின்தடை ஏற்பட்டால் ரொம்பவே கஷ்டம் தான். இந்தாண்டு இப்போதே வெப்பம் அதிகரிக்கும் நிலையில், எங்கு கோடைக் காலத்தில் மின் தடை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைமைச்செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் இரவு நேர மின் தேவை 19,000 மெகாவாட்டாக உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் மின்தேவை சராசரியாக 4,000 மெகாவாட்டாக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 19,308 மெகாவாட்டாக உள்ளது. போதுமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின்தடை ஏற்படுவதாகவும் இரவு 10 மணிக்கு மேல அதிகளவு மின்சார பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மின் மாற்றிகளில் பிரச்சினை ஏற்படுகிறது என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Electricity Department ,CHENNAI ,Shivdas Meena ,NLC ,Dinakaran ,
× RELATED கோடை காலத்தில் தங்கு தடையின்றி...