×

சபரிமலை சென்று சர்ச்சையை ஏற்படுத்தியவர் கனகதுர்காவை விவாகரத்து செய்தார் கணவர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறினார். ஆனால் இதற்கு பாஜ, காங்கிரஸ், ஆஸ்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இளம்பெண்களை அனுமதிப்பதை கண்டித்து கேரளா முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆனாலும் எதிர்ப்பை மீறி, கொச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்த ரெஹானா பாத்திமா உட்பட இளம்பெண்கள் சபரிமலை செல்ல முயன்றனர்.

ஆனால் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அவர்கள் அனைவரும் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி ஆகிய இளம்பெண்கள் அதிகாலை 3 மணியளவில் மாறுவேடத்தில் சபரிமலை சென்று தரிசனம் செய்தனர். இவர்கள் சபரிமலையில் இருந்து திரும்பிய பின்னர்தான் தரிசனம் செய்த விபரம் தெரியவந்தது. இதையடுத்து கேரளா முழுவதும் பயங்கர வன்முறை வெடித்தது. கனகதுர்கா மற்றும் பிந்து அம்மிணி சபரிமலை சென்றதை கண்டித்து அவர்களது வீட்டு முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து இருவரையும் போலீசார் சில நாட்கள் ரகசிய இடத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே கனகதுர்கா குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது. தன்னிடம் அனுமதி பெறாமல் கனகதுர்கா சபரிமலை சென்றதாகவும், அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி தெரிவித்தார். இதை எதிர்த்து கனகதுர்கா பெரிந்தல்மண்ணா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் கனகதுர்கா வீட்டுக்கு ெசன்றார். அப்போது மாமியார், மருமகள் இடையே அடிதடி, மோதல் ஏற்பட்டது.

மாமியார் தன்னை தாக்கியதாக கூறி கனகதுர்காவும், மருமகள் தன்னை தாக்கியதாக கிருஷ்ணன் உண்ணியின் தாயாரும் போலீசில் புகார் செய்தனர். ேமலும் கனகதுர்கா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கணவர் கிருஷ்ணன் உண்ணி தனது 2 குழந்தைகள் மற்றும் தாயாருடன், தான் வசித்து வந்த வீட்டைவிட்டு வாடகை வீட்டில் குடியேறினார். கனகதுர்கா மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் ஏற்கனவே வசித்து வந்த வீட்டில் தனியாக இருந்து வந்தார். இதற்கிடையே விவாகரத்து கோரி கிருஷ்ணன் உண்ணி பெருந்தல்மண்ணா குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனகதுர்காவுக்கு கணவர் கிருஷ்ணன் உண்ணி ₹10 லட்சம் நஷ்டஈடும் வழங்க உள்ளார்.

Tags : KanagaDurga ,Kanakadurga ,Sabarimala , sabarimala ,KanagaDurga ,divorce ,husband
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு