×
Saravana Stores

கொரோனா தடுப்பு பணியில் வேகம் காட்டி வந்த பொதுப்பணித்துறையில் 20 பொறியாளர்களுக்கு தொற்று: மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில் சிக்கல்

சென்னை: பொதுப்பணித்துறையில் 20 பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது  துறை வட்டாரத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், பொதுப்பணித்துறை மூலம் தான் மாநிலம் முழுவதும் உள்ள 138 மருத்துவமனைகளில் ெகாரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பது, தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தருவது, ஆக்சிஜன் சிலிண்டர் வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பது தொடர்பாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நிலையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் காலிபணியிடங்கள் உள்ள நிலையில், தற்போது பணியில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்பாகவும் நியமிக்கப்பட்டு அவர்களும், இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொறியாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் தொடரந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பொதுப்பணித்துறை வேலூர் கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டன. இதே போன்று திருவள்ளூர் செயற்பொறியாளர் ஒருவர் உட்பட 4 பேருக்கும், சிப்காட் அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்பட்ட பெண் செயற்பொறியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதே போன்று மயிலாடுதுறை நீர்வளப்பிரிவு செயற்பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதே போன்று மாநிலம் முழுவதும் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர் என 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் பணியில் இல்லாத சூழலில் மருத்துவமனைகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

Tags : engineers ,barricade ,Corona ,hospitalization Coroner , Corona Prevention Work, Speed, Public Works, 20 Engineer, Infection, Hospital, Necessary Facility, Problem
× RELATED கொசஸ்தலை உள்ளிட்ட ஆறுகளில் மழைநீரை...