×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் புழு; திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணியில் மலேரியா பிரிவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என 2,500 பேர் களப்பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் மூலம் காலை மற்றும் மதிய உணவு வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், இந்த களப்பணியாளருக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அந்த உணவை சாப்பிடாமல் குப்பையில் வீசினர்.
பின்னர், இதுகுறித்து மண்டல அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர். அப்போது, அவர் இனிமேல் இதுபோன்று நடக்காது, என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை களப்பணியாளர்களுக்கு காலை உணவாக வழங்கிய கிச்சடியிலும் புழு இருந்துள்ளது. இதை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், பலர் காலை சிற்றுண்டி சாப்பிடவில்லை. ஒரு சிலர் வேறு வழியின்றி சாப்பிட்டதால் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து களப்பணியாளர்கள் முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதில், களப்பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்காமல்  அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி களப்பணியாளர்கள் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு தினமும் உணவுக்காக 100 ரூபாய் வழங்க வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் அவ்வாறு வழங்காமல் அதற்கு பதிலாக அவர்களே தரமில்லாத உணவு வழங்குகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Thiruvottiyur ,field workers , Corona Prevention Worker, Fieldworker, Food Worm
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...