×

கொரோனா மரணங்களை மறைத்தல் உள்ளிட்ட குளறுபடி செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 32 ஆயிரம் சோதனைகளும், சென்னையில் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரமாக சோதனையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டாம். தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் மூலம் அதிகமான தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலே அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதே அரசின் பிரதான நோக்கம்.

சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில், 9,509 தெருக்களில் மட்டும்தான் தொற்று உள்ளது. இதில் 812 தெருக்களில் மட்டுமே 5க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிசை பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொரோனா என்றால் மரணம் என்ற எண்ணத்தில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தொண்டையில் வரக்கூடிய இதர வைரஸ் காய்ச்சல் போன்றதுதான் கொரோனா வைரஸ் தொற்று. எனவே நோயாளிகள் தப்பித்து ஓடுவது, தற்கொலை செய்வது, நோயாளிகளை புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நோயாளிகளை அழைத்து வர கூடுதல் ஆம்புலன்ஸ் இயக்கவும், தனியார் ஆம்புலன்ஸ்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகளை அதிகரிக்க பல்வேறு இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா மரணங்களை மறைத்தல் உள்ளிட்ட குளறுபடி செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



Tags : Radhakrishnan Legal ,hospitals ,Radhakrishnan ,deaths , Radhakrishnan A, Secretary to the Ministry of Health
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...