×

தூத்துக்குடியில் இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!: மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்ததால் அதிர்ச்சி..உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!!

தூத்துக்குடி: சாத்தன்குளத்தில் போலீசார் தாக்கியதில் இரு வியாபாரிகள் உயிரிழந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இளைஞர் ஒருவர் இறந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலைய தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் போலீசார் தாக்கியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டார். 29 வயதான கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 20ம் தேதி எட்டயபுரம் புறவழிசாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அந்த வழியில் சோதனையில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த கணேசமூர்த்தி தனது மனைவி மற்றும் பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட கணேசமூர்த்தி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். கட்டிட தொழிலாளி கணேசமூர்த்தியின் உடல் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். கணேசமூர்த்தியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு, தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் நிவாரணத்தொகை வழங்கப்படும் என கூறப்படுவதை ஏற்க மறுத்த உறவினர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஏற்கனவே சாத்தான்குளம் காவலர்கள் தாக்கியதில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்தனர். ராஜாசிங் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் அதிர்ச்சி அடங்குவதற்குள் எட்டயபுரத்தில் காவலர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tuticorin , Police attack Tuticorin youth: shocked youth committing suicide
× RELATED ‘பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில்...