×

சென்னை கோடம்பாக்கத்தில் முதற்கட்டமாக கொரோனா தொற்று பாதித்தோர்களை பிரித்து அனுப்பும் பரிசோதனை மையம் தொடக்கம்!!!

சென்னை: சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில் முதற்கட்டமாக கொரோனா தொற்று பாதித்தோர்களை 4 வகைகளில் பிரிந்து அனுப்பும் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் ஒவ்வொரு நாளும் பாதிப்புகள் 2 ஆயிரத்தை தாண்டுகின்றனர். மண்டல வாரியாக நோய் தொற்று உறுதி செய்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியில் நாள் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. பாதிப்பின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சில சமயங்களில் ஆம்புலென்ஸ்க்காக மறுநாள் வரை காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சென்ற பிறகு தொற்றின் வீரியம், அவர்களுக்கு உள்ள இணை நோய்களை அறிந்து கொள்ள சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்த பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை எடுத்தபிறகே அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதா? அல்லது தனிமை மையத்திற்கு அனுப்புவதா? என முடிவு செய்யப்படுகிறது. இதனால், நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதோடு களப் பணியாளர்களுக்கும் வேலை அதிகரித்துள்ளது. இவற்றை களையும் வகையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாகவே அவர்களின் நோய் பாதிப்பை கண்டறியும் பணிகள் பகுதி வாரியாக செய்யப்படுகிறது.

கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ், தனியார் டிராவல்ஸ் வாகனங்கள் மூலம் ஒரே இடத்திற்கு அழைத்து வரப்படுகின்றன. அங்கு இரு மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழு, மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் ஆகியோர் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒவ்வொருவருக்கும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை செய்கின்றனர். பின்னர், அவர்களுக்கு ரத்த பரிசோதனைகள், ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை பரிசோதித்து, உடற்பாதிப்புடன் கொரோனா தாக்கம் உள்ளவர்கள், அறிகுறிகள் மட்டும் இருப்பவர்கள், குறைவான அறிகுறி இருப்பவர்கள் மற்றும் அறிகுறி இல்லாதவர்கள் என 4 வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

அதில் முதல் இரு வகைகளில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். குறைவான அறிகுறி இருப்பவர்கள் தனிமை மையங்களுக்கும், அறிகுறி இல்லாதவர்கள் வீட்டு தனிமைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். வீட்டு தனிமைக்கு அனுப்பப்படுபவர்கள், வீட்டில் அதற்கான வசதி உள்ளதா? என சுகாதார ஆய்வாளர் வீட்டிற்கு சென்று உறுதி செய்த பின்னரே அவர்கள் அனுப்பப்படுகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியத்திற்கு ஏற்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களை பிரித்து அனுப்பும் பரிசோதனை மையம் முதற்கட்டமாக சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள நெசப்பாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளால் மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய சூழல் தவிர்க்கப்படுகின்றன. இதனால், அனைத்து மண்டலங்களிலும் இதுபோன்ற மையங்களை ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags : Coronal Infection Testing Center ,Inauguration ,Chennai ,Kodambakkam , Inauguration of Coronal Infection Testing Center in Chennai
× RELATED மார்பக புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்க விழா