×

வட சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ மையம் தொடக்கம்

பெரம்பூர்: கொரோனா தொற்றில் இருந்து குணமடைய சித்த மருத்துவம் பலனிப்பதாக கூறப்படுவதால், சென்னையில் சித்த மருத்துவ மயைம் அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, சாலிகிராமத்தில் சித்த மருத்துவ மையம் அமைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வடசென்னையிலும் சித்த மருத்துவ மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர்  கல்லூரியில், இந்த சித்த மருத்துவ மையம் நேற்று தொடங்கப்பட்டது. இங்கு முதல் தளத்தில் 224 படுக்கைகள் கொண்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவர் சசிக்குமார் மற்றும் தணிகைவேலன், இளஞ்சேரன், கண்ணன், சாய் சதீஷ் உள்ளிட்ட மருத்துவ வல்லுநர் குழுவினர் இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். குறைவான பாதிப்புள்ள நோயாளிகள் இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சித்த மருத்துவ கண்காணிப்பு குழுவின் பரிந்துரைப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களுடன் ஹாலோபதி மருத்துவர் ஒருவரும் உடன் இருப்பார். இந்த மையத்தில், நோயாளிகளுக்கு கழிப்பறை வசதி, மூலிகை குளியல், வேது பிடித்தல் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. வெளியிலிருந்து சாப்பாடு வரவழைக்காமல் இதே இடத்திலேயே இயற்கை முறையில் சமைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

காலை 6 மணிக்கு உப்பு தண்ணீரில் தொண்டை சுத்தம் செய்தல், நடைபயிற்சி, மூச்சு பயிற்சி, மூலிகை சிற்றுண்டி, மதியம் நோய்க்காப்பு சித்த உணவு, மாலையில் கசாயம், மீண்டும் தொண்டை சுத்தம் செய்தல், நடைபயிற்சி, இரவு மூலிகை சிற்றுண்டி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. உளுந்து சாதம், சாம்பார், மிளகு ரசம், வாழைப்பூ பொரியல், பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, மோர், ஜீரக தண்ணீர்  உள்ளிட்ட உணவு வகைகள் நோயாளிகளுக்கு பரிமாறப்படுகின்றன. மேலும் அதிமதுரம், நொச்சி குடிநீர், ஆடாதொடை, மணப்பாகு உள்ளிட்ட சித்த மருத்துவ மூலிகைகளும் நோயாளிகளுக்கு தரப்படுகிறது. வடசென்னையில் தொற்று அதிகமாக உள்ளதால் நோய் தொற்று உள்ளவர்கள் தாராளமாக இந்த மருத்துவமனையை அணுகலாம், என்றும், நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும் எனவும் சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விதிமீறி செயல்பட்ட நிறுவனத்துக்கு பூட்டு
பல்லாவரம், ஜூன் 26: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கலைவாணர் நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுவதாகவும், இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பணியில் ஈடுபடுவதாக அனகாபுத்தூர் நகராட்சி நிர்வாகத்திற்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஊரடங்கை மீறி கம்பெனி செயல்படுவது தெரிந்தது. அங்கு பணியில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றி, கம்பெனியை மூடி பூட்டு போட்டனர்.

Tags : North Chennai , Siddha Medical Center,Launches, Coronal Treatment ,North Chennai
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது