×

எல்லையில் மே மாத தொடக்கத்தில் இருந்தே படைகள், ஆயுதத்தை சீனா அதிகளவில் குவித்தது

புதுடெல்லி: ‘மே மாத தொடக்கத்தில் இருந்தே எல்லையில் சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும் அதிகளவில் குவிக்கத் தொடங்கியது. பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் சீன மீறியதாலேயே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது,’ என வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன படைகளுக்கு இடையேயான மோதல் சம்பவம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் வத்சவா ஆன்லைன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவின் வழக்கமான பாரம்பரிய ரோந்து பணிகளுக்கு சீன தரப்பு தடையாக பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. அங்கு தனது படைகளையும், ஆயுதங்களையும் குவித்தது.

அதே நேரத்தில் மே மாதத்தின் நடுப்பகுதியில் மேற்குப் பகுதியில் இரு முறை தனது நிலையை மாற்ற முயற்சி செய்தது.
சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து ராணுவ தரப்பிலும், தூதரக ரீதியாகவும் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். இதுபோன்ற எந்த மாற்றமும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை தெளிவுபடுத்தினோம். அதைத் தொடர்ந்து ஜூன் 6ம் தேதி மூத்த தளபதிகள் சந்தித்து எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புக் கொண்டனர். இது பரஸ்பர நடவடிக்கைகளை உள்ளடக்கியது. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை மதிக்கவும், நிலைமையை மாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என இருதரப்புகளும் ஒப்புக் கொண்டன.

ஆனால் கல்வான் பள்ளதாக்கு பகுதியில் சீன தரப்பு இந்த உறுதிப்பாட்டை மீறி பல்வேறு கட்டமைப்புகளை அமைக்க முயன்றது. அந்த முயற்சி தோல்வியுற்ற போது, சீன படைகள் கடந்த 15ம் தேதி வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டன. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதன்பிறகு, இரு தரப்புகளும் இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் படைகளை நிறுத்தி உள்ளன. அதே சமயம், ராணுவ மற்றும் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. 1993ம் ஆண்டு எல்லையில் அமைதியை பேணுவதற்கான முக்கிய ஒப்பந்தத்தை மீறி சீனா படைகள், ஆயுதத்தை குவித்து கட்டமைப்புகளை அமைத்து நிலைகளை மாற்ற முயற்சித்தது. இதனால் வேறுவழியின்றி, இந்தியாவும் பதிலுக்கு படைகளை குவிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றிணைந்து செயல்பட தயார்
எல்லை பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக இருப்பதாக சீன தூதர் சன் வெய்டன் கூறி உள்ளார். டெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்திய, சீன எல்லையின் ஒட்டுமொத்த சூழல் நிலையாகவும், கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்திய தரப்பு எல்லை நிலைமையை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்த்து, ஸ்திரத்தன்மையை காக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சீனாவும் இந்தியாவும் வேறுபாடுகளை முறையாக நிர்வகிக்க தயாராக உள்ளன. இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது. அதே சமயம், எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவே பெரும் பொறுப்பேற்க வேண்டும்’’ என்றார்.

Tags : China , May, border, China , concentrated ,heavily, troops and weapons
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...