காரைக்குடி: காரைக்குடி அருகே கல்லல் அரண்மனைச்சிறுவயலில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை பழமை மாறாமல் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயல் பகுதியில் பழங்கால கோட்டை உள்ளது. சிவகங்கையை ஆண்ட சசிவர்ணத்தேவர் வம்சத்தவரால் இந்த கோட்டை கட்டுப்பட்டுள்ளது. கிபி 18ம் நூற்றாண்டின் இறுதியில் மருது சகோதரர்கள் படையுடன் இந்த கோட்டையில் தங்கி ஆங்கிலேயருடன் போர் புரிந்துள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோட்டை, புராதானச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
தற்போது இக்கோட்டை ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.60 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரண்மனைசிறுவயல் கோட்டையில் படைவீரர்கள் இருக்கக் கூடிய மூன்று கொத்தள அறைகள் உள்ளன. அதனை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து பாதுகாத்து வருகிறோம். தட்பவெப்பநிலை, காலசூழ்நிலை, மழை காரணமாக இடிந்து, சுவர்கள் பெயர்ந்து, அரிமானம் ஏற்பட்டுள்ளது. இதனை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடக்கிறது’’ என்றனர். தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் ஒளிமாலிக் கூறுகையில், ‘‘கோட்டை கட்டுமான பணிக்கு சிமென்ட் பயன்படுத்துவது கிடையாது.
சுண்ணாம்பு, மணல், கடுக்காய், கருப்பட்டி கலவை கலந்து கட்டுமான பணி நடக்கிறது. இதற்கென கழுகுமலையில் இருந்து சுண்ணாம்பு, திருச்சி கொள்ளிடம் காவிரி மணலை பயன்படுத்துகிறோம். 13ம் நூற்றாண்டில் விஜயநகர காலத்தில் பயன்படுத்தப்பட்ட சிறிய அளவிலான செங்கல் (சித்துகல்) பயன்படுத்தப்படுகிறது. இக்கல் ராஜபாளையத்தில் வாங்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் பணிகள் முடிக்கப்படும்’’ என்றார்.