×

கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா: சக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கொரோனா நோய் கட்டுப்பாட்டு அலுவலகம், இ பாஸ் வழங்கும் அலுவலகம் ஆகியவை செயல்படுகிறது. இந்த அலுவலகத்தை ஒட்டி செங்கல்பட்டு தாலுகா அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களில் பல்வேறு துறைகளில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வேலை பார்க்கின்றனர். இதில், வட்ட வழங்கல் அலுவகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் காயச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், கொரோனா பரிசோதனை செய்தார். பின்னர் அவர், வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றார்.

அவர், பணியில் ஈடுபட்டிருக்கும்போது, சுகாதாரத் துறையினர் அங்கு சென்றனர். அவரை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது என கூறி, அந்த பெண் ஊழியரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களுக்கு பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியரகள் கொரோனா கட்டுப்பாட்டு அறை முன்பு கூடி மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஊழியர்கள் கூறூகையில், கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. ஆரம்பத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நோய் தொற்றை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முக கவசம், சானிடைசர், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டன. தற்போது எந்த வசதியையும் நிர்வாகம் செய்யவில்லை. கொரோனா நேரத்தில் 33 சதவீத ஆட்களை வைத்து சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆணையை மாவட்ட நிர்வாகம் பின்பற்றவில்லை.

ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்தால் மட்டுமே நாங்கள் பணியாற்றுவோம் என்றனர். பின்னர், கலெக்டரின் நேர்முக உதவிகயாளர் (பொது) விஜயகுமாரியை நேரில் சந்தித்து, இதுபற்றி தெரிவித்தனர். அதற்கு, கலெக்டர் தலைமைசெயலகம் சென்றுள்ளார். அவர் வந்தவுடன் பேசி நல்ல  முடிவு எடுப்பதாக அவர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் 2 மணிநேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் டிட்டோ உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலெக்டர் அலுவலக ஊழியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக  வந்து செல்கின்றனர். தினமும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டங்களுக்கு வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம்: மதுராந்தகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்படும் பொறியாளர் பிரிவில் பணியாற்றும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது. இதனை தொடர்ந்து, பொறியாளர் பிரிவு அலுவலகம் மட்டும் மூடி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளராக பணிபுரியும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நேற்று மதியம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலகம் இன்று முதல் அருகில் இருக்கும் இ-சேவை மையம் மற்றும் இயக்குனர் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட உள்ளது. பின்னர், உயரதிகாரிகள் வழிகாட்டுதல்படி தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகு அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தம்பதிக்கு தொற்று
திருக்கழுக்குன்றம் அடுத்த எச்சூர் லிங்காபுரத்தை சேர்ந்த கல்பாக்கம் அணுமின் நிலைய ஒப்பந்த ஊழியருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் தொடர்ந்து இருந்தது. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் மசூதி தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர், கடந்த 19ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தனர். கணவன் - மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, அவர்கள் சிகிச்சைப் பெற்ற திருக்கழுக்குன்றம் தனியார் மருத்துவமனை மூடப்பட்டது. எச்சூர் லிங்காபுரத்தில் உள்ள அவர்களது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுனர்.

12 பேர் பாதிப்பு
கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட தாழம்பூர், நாவலூர், படூர், மாம்பாக்கம், தையூர் ஆகிய இடங்களில் நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதேபோன்று செம்பாக்கத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


Tags : office staff ,colleague ,Corona ,colleagues ,demonstration , Collector office woman employee, corona, colleagues, demonstration
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...