×

நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்கள்; சென்னையில் 1.5 சதவீதமாக உயர்ந்த இறப்பு விகிதம்: ஜூன் 21ம் தேதி வரை 601 பேர் உயிரிழப்பு

சென்னை:  சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருதால் இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜுன் 21ம் தேதி வரை 601 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான்கு கட்ட ஊரடங்கில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் முழு பலனை அளிக்காத காரணத்தால் சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. ஜூன் 21ம் தேதி வரை சென்னையில் 41 ஆயிரத்து 172 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 887 பேர் குணமடைந்துள்ளனர்.

17 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், இறப்பு எண்ணிக்கையை அரசு கட்டுக்குள் வைத்து இருப்பதாகவும் அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஜூன் 21ம் தேதி வரை தமிழகத்தில் 757 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 601 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சென்னையில் தினசரி 30 முதல் 50 பேர் மரணம் அடைகின்றனர்.

கடந்த 10 நாட்களில் மட்டும் 344 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்படி 12ம் தேதி 15 பேரும், 13ம் தேதி 24 பேரும், 14ம் தேதி 33 பேரும், 15ம் தேதி 35 பேரும், 16ம் தேதி 40 பேரும், 17ம் தேதி 39 பேரும், 18ம் தேதி 40 பேரும், 19ம் தேதி 28 பேரும், 20ம் தேதி 48 பேரும், 21ம் தேதி 42 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.  சென்னையில் முதல் மரணம் ஏப்ரல் 5ம் தேதி பதிவானது. மே 5ம் தேதி மரண எண்ணிக்கை 100 ஐ கடந்தது. மே 31ம் தேதி வரை சென்னையில் 129 மரணங்கள் மட்டும் பதிவாகி இருந்தது. ஜூன் 1ம் தேதி முதல் சென்னையில் பலி எண்ணிக்கை உயர தொடங்கியது. இதன்படி ஜூன் 1ம் தேதி முதல் 21ம் தேதி வரை 472 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு சென்னையில் தொடர்ந்து மரணங்கள் அதிகரித்து வருதால் சென்னையை விட்டு தப்பித்தால் உயிர் பிழைத்து விடலாம் என்ற அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையை விட்டு வெளியேற தொடங்கிவிட்டனர். எனவே சென்னையில் சோதனை எண்ணிக்கையை  அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டறிய வேண்டும் என்று மருத்துவ  நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: சென்னையில் நாளுக்கு பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு வரை ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக எந்த பாதிப்பு இல்லாத இளம் வயதினர் மரணம் அடைந்து வருகின்றனர். எனவே இனி வரும் நாட்களில் சோதனையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிடில் இறப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களை எட்டவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Deaths ,Chennai , Deaths, Madras, Death Rate
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...